சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு வழக்கத்தைவிட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிப்ரவரி 15-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சமவெளி பகுதிகளில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.2 டிகிரி, குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 15 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (பிப்.16) முதல் 21-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும். இன்று ஒருசில இடங்களில் வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும், 17 முதல் 19-ம் தேதி வரை 4 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் லேசான பனிமூட்டம் காணப்படும். வெப்பநிலை 23 டிகிரி முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.