‘என் தலைப்பாகையை குப்பையில் வீசினர்’ – அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர் வேதனை!

அமிர்தசரஸ்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களில் 112 பேர் அந்த நாட்டில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை மூன்றாவது கட்டமாக அந்த நாடு திருப்பி அனுப்பியுள்ளது.

அந்த விமானத்தில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான ஜதீந்தர் சிங் என்ற இளைஞரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா வந்திருந்தார். அங்கு தடுப்பு காவல் முகாமில் தங்கியிருந்த போது அமெரிக்க அதிகாரிகள் துன்புறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

“கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க எல்லைக்குள் நான் நுழைய முயன்ற போது பிடிபட்டேன். தொடர்ந்து தடுப்பு காவல் முகாமுக்கு அனுப்பப்பட்டேன். கடந்த செப்டம்பரில் நான் இந்தியாவில் இருந்து புறப்பட்டேன். அமிர்தசரஸில் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் அமெரிக்கா சென்று சம்பாதித்து, குடும்பத்துக்கு உதவலாம் என அங்கு புறப்பட்டேன். எனது நண்பர்கள் கொடுத்த ஆலோசனைப்படி ரூ.50 லட்சம் ஏஜென்டுக்கு செலுத்தினேன். 1.3 ஏக்கர் நிலம் மற்றும் சகோதரிகளின் நகையை விற்று ரூ.22 லட்சம் முன்பணம் கொடுத்தேன். எனது ஏஜென்ட் என்னை ஏமாற்றிவிட்டார்.

தடுப்பு காவல் முகாமில் நான் இருந்தபோது எனக்கு முறையான உணவினை அதிகாரிகள் வழங்கவில்லை. உருளைக்கிழங்கு சிப்ஸ், பழச்சாறு போன்றவை தான் தந்தார்கள். எனது தலைப்பாகையை அகற்றி குப்பையில் வீசினார்கள். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். இருந்தாலும் அமெரிக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பி வந்த 36 மணி நேர பயணம் முழுவதும் எனது கைகளில் கைவிலங்கு பூட்டியும், கால்கள் கட்டப்பட்டும் இருந்தது. கழிவறை செல்லும் போது மட்டுமே அது கழட்டப்பட்டது. இப்போது இந்தியாவில் வேலை தேட உள்ளேன்” என ஜதீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்காவில் இருந்து வந்த விமானத்தில் 44 பேர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 33 பேர் குஜராத், 31 பேர் பஞ்சாப், 2 பேர் உத்தர பிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்கள். உத்தராகண்ட் மற்றும் இமாச்சல மாநிலத்தைச் சேர்ந்த தலா ஒருவரும் இதில் வந்தனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களில் இதுவரை சுமார் 332 பேர் இந்தியா திரும்பியுள்ளனர்.

அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்ட​விரோத​மாக​வும் குடியேறிய​வர்களைக் கண்டறிந்து நாடு கடத்தி வருகிறார் அந்த நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.