சென்னை: ஒற்றைத் தலைமையின் கீழ் வந்தும், தேர்தலை சந்திக்க திறனற்ற கட்சியாக அதிமுக உள்ளது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் மாநில தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பலர் பங்கேற்று, அதிமுக இணைப்பு அவசியம் என வலியுறுத்தினர்.
இதில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: “நமக்கெல்லாம் தெய்வமாக விளங்கும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நிரந்தர பொதுச்செயலாளர் பதவியில் அமர பழனிசாமிக்கு எப்படி தான் மனம் வந்ததோ தெரியவில்லை. அதிமுகவில் ரத்து செய்ய முடியாத விதியை ரத்து செய்திருக்கிறார். தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையம், உரிய முடிவெடுக்கும்.
கட்சிக்கென சட்ட விதிகளை உருவாக்கி, பதிவு செய்த பிறகு விதிகளில் இருந்து மாறுபட்டால் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. 3 ஆண்டுகளாக கட்சியை ஒன்றிணைக்க போராடி வருகிறேன். அனைவரும் ஒன்றிணையும் காலம் வெகு தூரத்தில் இல்லை. வரும் காலம் தேர்தல் காலம். சில ரகசியங்கள் இருக்கின்றன. அதன்படி செயல்பட்டு, 2026-ல் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம்” இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “அனைவரும் ஒன்றிணைந்தால்தான் 2026 தேர்தலில் வெற்றி பெற முடியும் என தொண்டர்களும், மக்களும் நினைக்கின்றனர். ஒருமித்த கருத்தோடு இணைய வேண்டும். அதற்கு சிலர் தடையாக இருக்கின்றனர். கட்சிக்கு ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என்று, ஒற்றைத் தலைமைக்கு வந்தும், தேர்தலை சந்திக்க திறனற்ற கட்சியாக தான் அதிமுக உள்ளது” என்றார்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், எம்பி தர்மர், எம்எல்ஏக்கள் மனோஜ் பாண்டியன், ஐயப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.