புதுடெல்லி: பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்க புதுடெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது ரயில் நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதுவரை 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா, வரும் 26-ம் தேதி நிறைவடைகிறது.
கும்பமேளா நிறைவடையும் நாட்கள் நெருங்குவதால் பிரயாக்ராஜ் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் இருந்து பிரயாக்ராஜ் செல்வதற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு டெல்லி ரயில் நிலையத்தில் பிரயாக்ராஜ் செல்வதற்காக 13 மற்றும் 14-வது நடைமேடையில் ஆயிரக்கணக்கானோர் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது, ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த டெல்லி போலீஸார், “மகா கும்பமேளாவுக்கு செல்ல அதிக அளவில் பயணிகள் டெல்லி ரயில் நிலையத்தில் திரண்டனர். இதற்கேற்ப, கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பிரயாக்ராஜ் செல்லும் 4 ரயில்களில் 3 ரயில்கள் தாமதம் ஆனதால், கூட்டம் அதிகரித்தது. தவிர, 14-வது நடைமேடையில் பிரயாக்ராஜ் விரைவு ரயில் நின்றிருந்தது. அப்போது, 16-வது நடை மேடைக்கு பிரயாக்ராஜ் சிறப்பு ரயில் வந்தடைந்தது. இதுகுறித்த அறிவிப்பால் பயணிகள் குழப்பம் அடைந்து, ஒரே இடத்தில் குவிந்தனர். இதனால் நெரிசல் ஏற்பட்டது” என தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து, டெல்லி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர், ரயில் நிலையத்தில் நெரிசலை நிர்வகிக்க டெல்லி காவல்துறை, ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் அரசு ரயில்வே காவல்துறை (GRP) ஆகியவற்றுடன் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் தடுப்புகளை அமைத்துள்ளோம். ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க விரைவான எதிர்வினை குழுக்களை நியமித்துள்ளோம். சிசிடிவி கண்காணிப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து நிகழ்நேர காட்சிகள் கண்காணிக்கப்படுகின்றன. பயணிகளுக்கு வழிகாட்டவும், பீதி அடையும் சூழ்நிலைகளைத் தவிர்க்கவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.
டெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது ரயில் அறிவிப்புகளில் ஏற்பட்ட குழப்பத்தால், பயணிகள் கூட்டம், ஒரு குறுகிய படிக்கட்டு வழியாக 16வது நடைமேடையை நோக்கி விரைந்தனர். மேலே செல்ல முயன்வர்களுக்கும் கீழே இறங்க முயன்றவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, டெல்லி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதை அடுத்து தற்போது கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.