சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஓய்வு பெறப்போகும் 3 இந்திய பிளேயர்கள்…!

Indian Cricketers Retirement | உலகக்கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அடுத்த உட்சபட்ச திருவிழாவான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19  ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இம்முறை இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நடத்துகிறது. எனினும் இந்தியா அந்நாட்டுக்கு சென்று விளையாடவில்லை. பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இந்த முடிவை எடுத்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய் மைதானத்தில் நடக்கிறது. ஒருநாள் உலகக்கோப்பையை தவறவிட்ட இந்திய அணி எப்படியாவது சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது.

ஏனென்றால் மூன்று இந்திய பிளேயர்களுக்கு ஒருநாள் போட்டியில் கடைசி தொடராக இருக்கலாம். அந்த மூன்று பிளேயர்களுக்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டி பார்மேட்டில் இருந்து சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் யார் என்றால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தான். இந்த மூன்று பிளேயர்களும் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையை வென்றவுடன் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதேபோல், சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றவுடன் ஓய்வை அறிவிக்கலாம் என கேப்டன் ரோகித் சர்மா, விராட், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.

ரோகித் சர்மா 

கேப்டன் ரோகித் சர்மா ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார். ஏனென்றால் ரோகித் சர்மாவுக்கு இப்போது 37 வயதாகிறது. அடுத்த ஒருநாள் போட்டி உலகக்கோப்பை 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடக்க உள்ளது. அந்த நேரத்தில் ரோகித் சர்மா கிட்டதட்ட 40 வயதை நெருங்கிவிடுவார் என்பதால், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் பிசிசிஐ அவரை இந்திய அணியில் வைத்திருக்காது. அதனால் அவராகவே ஓய்வு பெற முடிவு செய்திருக்கிறார்.

விராட் கோலி

இந்திய அணியின் மற்றொரு ஸ்டார் பிளேயர் விராட் கோலி 36 வயதில் உள்ளார். அவர் பிட்னஸாக இருந்தாலும் இளம் பிளேயர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் பிசிசிஐ இளம் கிரிக்கெட் பிளேயர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளது. விராட் கோலியைப் பொறுத்தவரை அடுத்த உலகக்கோப்பை வரை விளையாடலாம் என்ற முடிவில் தான் இருக்கிறார். ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்தே முடிவாகும். இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் நெருக்கடி ஏதும் எழாமல் இருக்கும்பட்சத்தில் இவர் தொடர்ந்து விளையாட வாய்ப்புள்ளது.

ரவீந்திர ஜடேஜா 

இந்திய அணியின் ஸ்டார் ஆல்ரவுண்டர்களில் ஒருவர் ரவீந்திர ஜடேஜா. இடது கை சுழற்பந்துவீச்சாளர், இடது கை பேட்ஸ்மேன், நட்சத்திர பீல்டர் என்பது இவருடைய தனிச்சிறப்பு. இருப்பினும் இவருக்குப் போட்டியாக இந்திய அணியில் அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் வந்துவிட்டனர். இன்னும் சிலர் லைனில் இருக்கின்றனர். அதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பிறகு இவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்குமா? என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஒருவேளை அதிரடியாக ஆடி முத்திரை பதித்தால் இன்னும் சில காலம் விளையாட வாய்ப்பு கிடைக்கும். சொதப்பிவிட்டால், சாம்பியன்ஸ் டிராபி தொடரே இவருக்கு கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடராக இருக்கும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.