புதுடெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (பிப்.17) அதிகாலை 5.36 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.0 ஆக பதிவானது.
தேசத்தில் நிலநடுக்கம் உள்ளிட்டவற்றை கண்காணித்து வரும் அரசு நிறுவனமான தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் இதை உறுதி செய்துள்ளது. டெல்லியை மையமாகக் கொண்டு வட இந்தியா முழுவதும் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக அந்த மையம் தெரிவித்துள்ளது. பூமியில் 5 கி.மீ. ஆழத்தில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் உறுதியாகி உள்ளது.
டெல்லியின் தவுலா குவானில் (Dhaula Kuan) நில அதிர்வின் மையப்புள்ளி பதிவாகி உள்ளது. இந்த பகுதிக்கு அருகே ஏரி அமைந்துள்ளது. அதேபோல இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை லேசான நில அதிர்வு இந்தப் பகுதியில் பதிவாகிறது. கடந்த 2015-ல் ரிக்டரில் 3.3 என்ற அளவில் நில அதிர்வு பதிவாகி உள்ளது. நில அதிர்வு ஏற்பட்ட போது சத்தம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி மற்றும் அதனையொட்டி உள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். “டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. அனைவரும் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்” என பிரதமர் மோடி அந்த பதிவில் கூறியுள்ளார்.
‘திடீரென அனைத்தும் அதிர ஆரம்பித்தது. எனது வாடிக்கையாளர்கள் அலறினர்’ என புதுடெல்லி ரயில் நிலையத்தில் கடை வைத்துள்ள வியாபாரி ஒருவர். ‘நான் பாதாளத்துக்குள் ஏதோ ரயில் ஓடுகிறது என கருதினேன்’ என ரயில் பயணி ஒருவர் கூறினார். ‘இது போல இதற்கு முன்பு உணர்ந்தது இல்லை. கட்டிடங்கள் அப்படியே குலுங்கின’ என்கிறார் காசியாபாத் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர்.
நில அதிர்வு மண்டல வரைபடத்தின் பிஐஎஸ் நிலைப்படி உயர் நில அதிர்வு மண்டலத்தில் (மண்டலம் IV) டெல்லி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.