டெல்லியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4 அலகுகளாக ஆக பதிவானது.
டெல்லியில் நேற்று காலை 5.36 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இது ரிக்டர் அளவுகோளில் 4.0 அலகுகளாக பதிவானதாகவும் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியின் துர்காபாய் தேஷ்முக் கல்லூரி பகுதியை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின்போது, டெல்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காஜியாபாத் உள்ளிட்ட பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் வீடுகளில் இருந்த பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேறினர். இந்த நிலநடுக்கம் டெல்லியைச் சுற்றி உள்ள பிஹார், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் உணரப்பட்டது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில், “டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் அமைதியாக இருப்பதுடன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்ற வேண்டும். தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் விழிப்புடன் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்” என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து டெல்லி போலீஸார் கூறும்போது, “நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறோம். அவசர உதவிக்கு 112 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்றனர்.
ஆம் ஆத்மி மூத்த தலைவர் ஆதிஷி, “டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், “அனைவரின் பாதுகாப்புக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
டெல்லி ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் கூறும்போது, “நான் காத்திருப்பு அரங்கில் இருந்தேன். அப்போது திடீரென அனைவரும் வெளியே ஓடினர். பாலம் இடிந்துவிட்டதோ என நான் நினைத்தேன்” என்றார்.
காஜியாபாத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, “நில அதிர்வு பலமாக இருந்தது. இதற்கு முன்பு இதுபோல ஏற்பட்டதே இல்லை. கட்டிடம் முழுவதும் குலுங்கின” என்றார்.