‘கோகிலா’, ‘வீடு’, ‘சந்தியா ராகம்’, ‘வண்ண வண்ண பூக்கள்’ ‘மூன்றாம் பிறை’ என தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க கிளாசிக் படங்களை கொடுத்தவர் பாலுமகேந்திரா. இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திராவிடம் இருந்து வெற்றிமாறன், ராம், பாலா, சீனுராமசாமி, அஜயன்பாலா என பல இயக்குநர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

‘வீடு’, ‘சந்தியா ராகம்’, ‘வண்ண வண்ண பூக்கள்’ ஆகிய படங்களை இயக்கியதற்காக மூன்றுமுறை, தேசிய விருதுகளை வென்றவர். கடந்த பிப்ரவரி 13-ம் தேதி பாலுமகேந்திராவின் நினைவு நாளாகும். அவரை போற்றும் விதமாக சென்னையில் உள்ள வேல்ஸ் கல்லுரியில் நான்கு நாள்கள் நிகழ்வுகள் நடைபெற்றது. ‘பாலுமகேந்திராவை கொண்டடுவோம்’ என்ற பெயரில் நடந்த இந்த விழாவில் பாலுமகேந்திராவின் படங்கள் சிலவற்றின் திரையிடலும், அதனைத் தொடர்ந்து அது குறித்தான கலந்துரையாடலும் நடைபெற்றன. இந்த நிகழ்வில் நடிகைகள் அம்பிகா, பூர்ணிமா ஜெயராம், ரோகிணி, ‘நிழல்கள்’ ரவி இயக்குநர்கள் வெற்றிமாறன், அஜயன்பாலா இவர்களுடன், இளையராஜாவும் பங்கேற்று, மாணவர்களுடன் உரையாடி மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதில் சில இங்கே..
”பாலுமகேந்திரா சாரிடம் வேலை செய்த போது, படப்பிடிப்பில் நடிகர் நடிகைகள் வசனம் பிராம்ப்டிங் பண்ணும் போது, வேக வேகமாக பேசிவிடுவேன். சார் என்னிடம் ‘மெதுவாக பேசு’ என்பார். எனக்கு எதுவுமே ஸ்பீட் ஆக இருந்தால் தான் பிடிக்கும். இவர் ஏன் எல்லாமே மெதுவாகவே பண்ணுகிறார் என தோணியிருக்கு. ஆனா, அவரது படங்களை பார்க்கையில் தான் நிறைய விஷயங்கள் பிடிபடுகிறது. இப்போதும் அவரது படங்கள் பொருந்திப் போகிறது. காரணம், அவரது கதாபாத்திரங்களிடம், வசனங்களில்… எல்லாவற்றிலும் ஒரு ‘சைலன்ஸ்’ இருந்தது. அப்போது பிடிக்காத சில படங்கள் இப்போது பார்க்கையில் ரொம்பவும் பிடிக்கிறது. குறிப்பாக இங்கே திரையிடப்பட்ட ‘மறுபடியும்’ படம். ‘வீடு’, ‘சந்தியா ராகம்’, மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்த படங்கள். அதைப் போல, ‘மூடுபனி’யில் அதன் ஆரம்ப காட்சிகளை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்று கூட தோணியிருக்குது” ‘ என்றார் வெற்றிமாறன்.

நிகழ்வில் இளையராஜா பகிர்ந்தவை..
”எனக்கு ரொம்ப பிடித்த இயக்குநர் பாலுமகேந்திரா. ஒருசில இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைக்கும் போது, மனதுக்கு இதமாக ரிலீஃப் ஆக இருக்கும். அப்படி ஒரு உணர்வை ஏற்படுத்தக்கூடிய அளவில் பாலுமகேந்திராவின் படங்கள் இருக்கும் என்பதால், ரொம்பவே இன்னும் ரசனையோடு செய்வேன். அவரது ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையே இசையமைக்கும் இடைவெளிகளில் நான் நூறு படங்களுக்கு இசையமைத்து முடித்திருப்பேன். அந்த படங்களுக்கு இசையமைத்ததை விட, பாலுமகேந்திராவின் படங்களுக்கு இசையமைக்கும் போது இனம்புரியாத ஒரு சந்தோஷம் வந்து ஒட்டிக்கும். என்னோட முழு சுதந்திரமும் எடுத்து இசைமைப்பேன்.
‘மறுபடியும்’ படத்தின் இசையில் ஒரு புதுமை செய்திருக்கிறேன். அதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா! அந்த படத்தில் ரேவதி, ரோகிணி என இரண்டு பேரும் நடித்திருப்பார்கள். படத்தில் ரேவதி வரும் காட்சிகளில் அவரது கதாபாத்திரத்திற்கென பாசிட்டிவ்வை உணர்த்தும் இசையும், ரோகிணி வரும் காட்சிகளுக்கென நெகட்டிவிட்டியை உணர்த்தும் ஒரு இசையும் கொடுத்திருப்பேன். இரண்டு பேருக்கான காட்சிகளில் மாறி மாறி அந்தந்த இசைகளை கொடுத்திருப்பேன். இதில் ஆச்சரியம். இரண்டுக்கான இசைகளுமே மிகப் பொருந்தி வந்திருக்கும். ” என நெகிழ்து பேசினார் இளையராஜா.