மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என எஸ்.பி. தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரை அடுத்த முட்டம் கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை(28), ராஜ்குமார்(34) ஆகியோர் புதுச்சேரி சாராயம், மதுபாட்டில்களை காரைக்காலில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி வந்து, அப்பகுதியில் விற்பனை செய்துள்ளனர். மது விற்பனையில் ஈடுபட்டதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட ராஜ்குமார் பிப்.14-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.
இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கும் தங்கதுரையின் சகோதரர் மூவேந்தனுக்குமிடையே கடந்த 13-ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தினேஷ் மற்றும் அவரது நண்பர்களான முட்டம் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ், அவரது சகோதரர் அஜய்(19), மயிலாடுதுறை சீனிவாசபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரிசக்தி(20) ஆகிய 4 பேரும் பிப்.14-ம் தேதி இரவு முட்டம் வடக்கு வீதியில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த தங்கதுரை, ராஜ்குமார், மூவேந்தன் ஆகிய 3 பேரும் தினேஷிடம் தகராறு செய்து, கத்தியால் குத்தியுள்ளனர்.
அப்போது தடுக்க முயன்ற ஹரிஷ், ஹரி சக்தி, அஜய் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில், ஹரிஷ், ஹரிசக்தி ஆகியோர் உயிரிழந்தனர். இதையடுத்து, சாராய வியாபாரத்தை தட்டிக் கேட்டதால்தான் இந்த கொலை சம்பவம் நடந்ததாக குற்றம்சாட்டி, உயிரிழந்தோரின் குடும்பத்தார், உறவினர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். ராஜ்குமார், மூவேந்தன் வீடுகள் சூறையாடப்பட்டன.
கொலை சம்பவம் குறித்து பெரம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சாராய வியாபாரிகள் மூவேந்தன், தங்கதுரை, ராஜ்குமார் ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து, உயிரிழந்தோரின் உடல்கள் அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, போலீஸார் பாதுகாப்புடன் உடனடியாக அடக்கம் செய்யப்பட்டன. இதனிடையே தினேஷ் மற்றும் மூவேந்தன் தரப்பினரிடையே இருந்த முன்விரோதமே இந்த சம்பவத்துக்கு காரணம். மது விற்பனை குறித்து தட்டிக்கேட்டதால் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மயிலாடுதுறை எஸ்.பி. கோ.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சாராய விற்பனை செய்ததை தடுத்ததால்தான் கொலை சம்பவம் நடைபெற்றதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல் துறை அதிகாரிகள் மெத்தனப்போக்கில் நடந்து கொண்டார்கள் என்று தெரியவந்தால், அவர்கள் மீதும் கட்டாயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், தேவையற்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்’’ என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்று மூவேந்தன், தங்கதுரை ஆகியோரின் தந்தை முனுசாமி உள்ளிட்ட சிலரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு முட்டம் பகுதியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள செல்வம் என்பவரின் தர்பூசணி கடையின் கீற்றுக் கொட்டகைக்கு தீ வைக்கப்பட்டது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க முட்டம் பகுதியில் போலீஸார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.