Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த வாரம் பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது. வரும் 20ம் தேதி துபாயில் இந்த போட்டி நடைபெறுகிறது. இதற்கான தீவிர பயிற்சியில் இந்திய அணியின் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு பயிற்சியின் போது ரிஷப் பந்திற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் ஆரம்ப பயிற்சியின் போது ஹர்திக் பாண்டியா அடித்த ஷாட் ரிஷப் பந்த் முழங்காலில் பட்டதாக கூறப்படுகிறது.
துபாயில் இந்திய அணி
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக கடந்த வாரம் இந்திய அணியின் வீரர்கள் துபாய்க்கு சென்றனர். கடந்த சில தினங்களாக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது பந்திற்கு காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு பிசியோதெரபிஸ்டு உதவியுடன் பந்த் அழைத்து செல்லப்பட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டில் நடந்த எதிர்பாராத கார் விபத்தில் பந்திற்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு மீண்டும் அணியில் இடம் பெற்ற பந்த் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியா தொடரிலும் இதே போல பந்திற்கு காலில் பந்து பட்டு சிறிது நேரம் கீப்பிங் செய்ய வரவில்லை.
சாம்பியஸ் டிராபியில் பாதிக்குமா?
இந்திய அணியில் தற்போது யார் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவார்கள் என்ற குழப்பம் நிலவி வருகிறது. ஆஸ்திரேலியா தொடரில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்தார், அதே சமயம் கே.எல்.ராகுல் ஸ்லிப்பில் பீல்டிங் செய்தார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் தொடரில் ராகுல் தான் விக்கெட் கீப்பிங் செய்தார். ரிஷப் பந்த் அணியில் இடம் பெறவில்லை. எனவே சாம்பியன்ஸ் டிராபியிலும் பந்த் அணியில் இடம் பெற மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சாம்பியன்ஸ் டிராபியில் கேஎல் ராகுல் தான் முதல் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
கவுதம் கம்பீர் செய்தியாளர் சந்திப்பு
“கேஎல் ராகுல் தான் எங்கள் அணியின் முதல் தேர்வு விக்கெட் கீப்பர். இதைத்தான் தற்போது என்னால் சொல்ல முடியும். ரிஷப் பந்த் அவரது வாய்ப்பை நிச்சயம் பெறுவார், ஆனால் தற்போது கேஎல் ராகுல் சிறப்பாக செயல்பட்டுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி அணியில் இரண்டு விக்கெட் கீப்பர்-பேட்டர்களை விளையாட வைக்க முடியாது” என்று திட்டவட்டமாக செய்தியாளர் சந்திப்பில் கம்பீர் தெரிவித்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியிலும் சிறப்பாக விளையாடினார். இதனால் பந்திற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. இந்தியா வங்கதேசத்திற்கு எதிராக பிப்ரவரி 20 ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் தனது சாம்பியன்ஸ் டிராபி பயணத்தை தொடங்க உள்ளது.