புதுச்சேரி தவளக்குப்பம் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி, அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்படடதாக எழுந்த புகார் மாநிலத்தில் அசாதாரண சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில், காவல்துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் காவல்துறை தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், “தனியார் பள்ளியில் மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளான விவகாரத்தில், யாருடைய தலையீடும் இன்றி செயல்படும் காவல்துறை, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதேபோல புதுச்சேரியில் குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவின் செயல்பாடுகளை துரிதப்படுத்துவது குறித்து, முதலமைச்சர் ரங்கசாமியுடன் ஆலோசனை செய்யப்படும். மேலும் புதுச்சேரியிலுள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான பாலியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துப் பள்ளிகளிலும் பாலியல் சீண்டல்கள் குறித்துப் புகார் தெரிவிக்க, காவல்துறை சார்பில் விரைவில் புகார் பெட்டிகள் வைக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.