அமெரிக்காவால் நாடு கடத்தப்படும் இந்தியர்கள் உள்ளிட்டோர் தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்வதற்கு பாலமாக செயல்பட கோஸ்டா ரிகா நாடு ஒப்புக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகாவின் அதிபர் ரோட்ரிகோ சாவ்ஸ் ரோபிள்ஸின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்தியா மற்றும் மத்திய ஆசியாவைச் சேர்ந்த, அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை திருப்பி அனுப்புவதற்கு ஒரு ‘பாலமாக’ செயல்பட கோஸ்டா ரிகா ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி, 200 புலம்பெயர்ந்தோர் கொண்ட முதல் குழு நாளை (புதன்கிழமை) வணிக விமானத்தில் ஜுவான் சாண்டமரியா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும். இவர்கள் இந்தியா மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்பாக, கோஸ்டா ரிகாவில் உள்ள ஒரு தற்காலிக புலம்பெயர்ந்தோர் பராமரிப்பு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். பின்னர் அங்கிருந்து அவர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்குச் செல்வார்கள். இதன்மூலம், அவர்கள் தங்கள் சொந்த நாடுகளை அடைவதற்கு கோஸ்டா ரிகா ஒரு பாலமாக செயல்படும். அமெரிக்க நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புலம்பெயர்ந்தவர்கள் கோஸ்டா ரிகாவில் தங்கி இருக்கும்போது, அவர்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறாரகள் என்பதை சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) மேற்பார்வையிடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நாளை கோஸ்டா ரிகா செல்லும் 200 பேரில் எத்தனை பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை. கடந்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியிருப்போர் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இத்தகைய அறிவிப்பு வெளியாகி உள்ளது. சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியிருந்த இந்தியர்களில் இதுவரை 332 பேர் அமெரிக்காவில் இருந்து 3 விமானங்கள் மூலம் இந்தியா திரும்பி உள்ளனர்.
முன்னதாக, அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவித்தார். அதன்படி அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி அமெரிக்காவில் இருந்து 104 இந்தியர்களுடன் முதல் விமானம் கடந்த 5-ம் தேதி அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இவர்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து 112 இந்தியர்களுடன் இரண்டாவது விமானம் கடந்த 15-ம் தேதி சனிக்கிழமை இரவு அமிர்தசரஸ் வந்தது. இதிலும் இந்தியர்கள் விலங்கிடப்பட்டு அழைத்துவரப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், இரண்டாவது விமானத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் விலங்கிடப்படவில்லை, அவர்கள் கைதிகளை போல நடத்தப்படவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் உறுதி செய்தன.
முன்னதாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திரும்ப அழைத்துக்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் மோடி அறிவித்தார். இது தொடர்பாக வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி கூறுகையில், “அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களில் பெரும்பாலானோர் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் சட்டவிரோதமாக ஆட்களை கொண்டு சேர்க்கும் முகவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். எனவே ஆட்கடத்தல் தொடர்பான ஒட்டுமொத்த அமைப்புக்கு எதிராக நாம் போரிட வேண்டும். இதற்கு ட்ரம்ப் ஒத்துழைப்பு அளிப்பார் என நம்புகிறேன்” என்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியில் கோஸ்டா ரிகா பாலமாக செயல்பட இருப்பது, கைவிலங்கு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.