கராச்சி,
நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது.
கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் (19-ந் தேதி) பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதனையொட்டி கராச்சி மைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மைதானத்தில் இந்தியாவை தவிர்த்து மற்ற 7 நாடுகளின் தேசியக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. இதில் இந்திய நாட்டின் தேசிய கொடி பறக்கப்படவில்லை என்பது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் இந்திய தேசிய கொடி கராச்சி மைதானத்தில் ஏன் ஏற்றப்படவில்லை? என்பது குறித்த தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், “இந்திய அணி சில காரணங்களால் எங்களது நாட்டிற்கு வர முடியாது என்று கூறி இங்கு வந்து விளையாடுவதை தவிர்த்து விட்டது. அதனால் போட்டிகளை துபாய்க்கு மாற்றினார்கள். அதனால் இங்கு வந்து விளையாடப் போகும் நாடுகளின் கொடிகளை மட்டுமே ஏற்றியுள்ளோம்” என்று கூறினார்.