புதுடெல்லி: நகைச்சுவை நடிகர் சாமே ரைனாவின் ‘மறைந்திருக்கும் இந்தியா’(India’s Got Latent) நிகழ்ச்சியில் ஆபாச நகைச்சுவைகளை கூறியதாக யூடியூபர் மற்றும் பாட்காஸ்டர் ரன்வீர் அல்லாபாடியா மீது தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் அவர் கைதுசெய்யப்படுவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. என்றாலும் மனதில் உள்ள அழுக்குகளை வாந்தியெடுத்ததாக ரன்வீரை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம், அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடைவிதித்துள்ளது.
‘மறைந்திருக்கும் இந்தியா’ நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்காக தன்மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கு எதிராக ரன்வீர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவினை விசாரணை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுபோன்ற கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டும். அல்லாபாடியாவின் பெற்றோர்களும் உறவு கொள்கிறார்கள் என்ற கருத்து முழு சமூகத்தையும் வெட்கப்பட வைக்கும் அவரின் வக்கிரமான மனதினைக் காட்டுகிறது.
இனி ரன்வீர் எந்த யூடியூப் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கூடாது. மகாராஷ்டிரா மற்றும் அசாமில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழக்கு தொடர்பாக எந்த மிரட்டல்கள் வந்தாலும், அவர் மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பு கோரி மகாராஷ்டிரா மற்றும் அசாம் மாநில அரசுகளை நாடலாம்” என்று தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசு, மகாராஷ்டிர அரசு மற்றும் அசாம் அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வழக்கு விசாரணையின் போது, ரன்வீர் அல்லாபாடியா தெரிவித்திருந்த விரும்பத்தகாத கருத்துக்களுக்காக உச்ச நீதிமன்றம் அவரைக் கடுமையாக கண்டித்திருந்தது. “மறைந்திருக்கும் இந்தியா நிகழ்ச்சி தொடர்பாக இனி ரன்வீர் மீது வேறு எந்த வழக்குகளும் தொடரக்கூடாது. அனுமதி இல்லாமல் ரன்வீர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது.
அத்தகைய நகைச்சுவைகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை, அருவறுப்பானவை. இதுபோன்ற விஷயங்களைக் கூறும்போது பொறுப்புடன் இருக்க வேண்டும். சமூகத்தை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இதுபோன்ற கருத்துக்களைக் கூற உங்களுக்கு உரிமை உள்ளதா?
ஜெய்ப்பூரில் ரன்வீர் மீது ஏதாவது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த வழக்கிலும் ரன்வீர் கைது செய்யப்படுவதும் தடைசெய்யப்படுகிறது. ரன்வீர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி, தனது பாஸ்போர்டை தானே காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
நீங்கள் கூறிய வார்த்தைகளுக்காக உங்களின் பெற்றோர் வெட்கப்படுவர், சகோதரிகளும் மகள்களும் வெட்கப்படுவர். இந்த ஒட்டுமொத்த சமூகமும் வெட்கப்படும். சட்டத்தின் ஆட்சி மற்றும் சமூக ஒழுங்கை பின்பற்ற வேண்டும்.
பெற்றோர்கள் குறித்து அவர் பேசிய வார்த்தைகளை கவனியுங்கள். அவர் அதை எங்கிருந்து எடுத்தாண்டார் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் ஐவரி கோபுரத்தின் மீது அமர்ந்திருக்கவில்லை. அவர் (ரன்வீர்) அதனை ஒரு ஆஸ்திரேலிய நிகழ்ச்சியில் இருந்து எடுத்துப் பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும். அதைச் செய்வதற்கு முன்பு அவர்கள் எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தார்கள் என்பதையும் நீங்கள் பார்க்க வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
வழக்கு விசாரணையின் போது, ரன்வீர் சார்பில் ஆஜரான உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டின் மகன் அபினவ் சந்திர சூட், தனது கட்சிக் காரருக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவது நாக்கை வெட்டுபவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அதற்கு, அபினவைச் சாடிய நீதிபதிகள், யூடியூபரின் மொழிகளை நியாயப்படுத்துகிறீர்களா என்று கேள்வி எழுப்பினர்.
பெரும் சர்ச்சையைத் தொடர்ந்து தனது கருத்துக்களுக்காக மன்னிப்புக் கோரிய அல்லாபாடியா, அவை பொருத்தமற்றவை, அது நகைச்சுவையில்லை என்று தெரிவித்திருந்தார். மேலும் மத்திய அரசின் நோட்டீஸை தொடர்ந்து, மறைந்திருக்கும் இந்தியா நிகழச்சி தொடர்பாக அனைத்து வீடியோக்களையும் அவர் நீக்கிவிட்டார்.