விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்பட்டது. இந்த முடக்க நடவடிக்கையை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் இன்று ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது. அதில் கலந்துகொண்ட விகடன் குழும ஆசிரியர்களுள் ஒருவரான அறிவழகன், இந்த விவகாரத்தில் விகடன் தரப்பு நியாயத்தை கூர்மையாக முன்னெடுத்து வைத்தார்.

ஆசிரியர் அறிவழகன் பேசியதாவது, “நம் வீட்டில் ஒரு துக்கமான சம்பவம் நடக்கும்போது, ஒரு வீட்டில் போய் விருந்து சாப்பிடுவோமா? அதுவும் அந்த துக்ககரமான சம்பவத்துக்கு காரணமானவர் வீட்டுக்கே சென்று விருந்து சாப்பிடுவோமா? இப்போது அதுதான் இங்கே நடந்துகொண்டிருக்கிறது. இது எல்லாவற்றையும் கண்டித்துதான் அந்த கார்ட்டூன் வெளிவந்தது. இது விகடன் என்ற ஒரு தனிப்பட்ட பத்திரிகைக்கான எதிர்ப்பு அல்ல என்பதை பத்திரிகையாளர் மணி ஒரு வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
எந்த தனிமனிதனும் முன்வந்து சுதந்திரமாக பேசக் கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட தாக்குதலே இது. இதற்கு எதிராக நாம் கிளர்ந்து எழ வேண்டும். அதேபோல, இந்தச் சம்பவம் தொடர்பாக திரு.என்.ராம் அவர்கள் தன்னிச்சையாக பல ஆங்கில ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்தார்.

விகடனுக்கு ஆதரவாக இந்தியாவில் உள்ள பல பத்திரிகையாளர் சங்கங்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றன. இங்கே தன்னெழுச்சியுடன் பத்திரிகையாளர்கள் ஒற்றுமையோடு விகடனுக்கு துணையாக கூடியுள்ளதை பார்க்கையில் நெகிழ்ச்சியாக உள்ளது. அந்த வகையில் உங்கள் எல்லோருக்கும் நன்றி” எனக் கூறினார்.