`கேலிச்சித்திரத்துக்கு எதிரான அதிகார பிரயோகம் நகைச்சுவையாக மாறிவிடும்'- கார்ட்டூனிஸ்ட் பாலா

விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்பட்டது. இந்த முடக்க நடவடிக்கையை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது. அதில் கலந்துகொண்ட கார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும் பத்திரிகையாளர் மணிமாறன் ஆகியோரின் கருத்துச்சுதந்திரத்துக்கு ஆதரவான செறிவுமிக்க பேச்சு இங்கே.

கார்ட்டூனிஸ்ட் பாலா

கார்ட்டூனிஸ்ட் பாலா பேசுகையில், “கார்ட்டூன் என்பது ஒரு சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றது. சமூகத்தில் நடப்பதை சித்திரித்து எழுதுவது. இந்த கார்ட்டூனுக்கு எதிராக அரசு தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தும் போது, அந்த கார்டூனை விட அந்த அதிகாரம் கேலிப்பொருளாக மாறிவிடும். இதற்கடுத்து மாநில மற்றும் ஒன்றிய அரசு ஒரு கார்ட்டூனை கார்டூனாக மட்டும் பார்த்து ரசித்துவிட்டு கடந்துபோகும் படி வேண்டுகிறோம். கார்ட்டூன்களுக்கு எதிராக உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது, நீங்கள் நகைச்சுவை பொருளாக மாறிவிடுவீர்கள்.” என்று பேசினார் கார்டூனிஸ்ட் பாலா.

அவரைத் தொடர்ந்து பேசிய பத்திரிகையாளர் மணிமாறன், “நாம் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருக்கும் போது, மூன்றாவது முறையாக அதே போல இந்தியர்களை போர் விமானத்தில் விலங்கிட்டு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கார்டூன் ஒரு அறச்சீற்றம். இதற்காக விகடன் இணைய தளத்தை கொள்ளைப்புறம் வழியாக அரசு முடக்கியிருப்பது கண்டனத்துக்குரியது. இதுவரை என்னென்ன நடந்தது என்பது பற்றி விரிவாக விகடன் நேற்று இரவு தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளது. இதுவரை அரசிடமிருந்து இணைய தளம் முடக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை.

மணிமாறன்

ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற தொனியில் விகடனுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி இணைய தளங்களையும் சோஷியல் மீடியாக்களையும் முடக்குவதை வைத்து ஒன்றிய அரசு எதையோ செய்ய நினைக்கிறது. ஒன்றிய‌ அரசின் இந்த போக்கை முறியடிப்பது நம்முடைய கடமை. அதற்காக பத்திரிகையாளர் மன்றம் எப்போதும் துணை நிற்கும்.” என்று பேசினார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.