சாராய விற்பனையை தட்டி கேட்ட இளைஞர்கள்..
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே உள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தினேஷ் (28), ஹரிஷ் (25). இவர்களது நண்பர் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த ஹரிசக்தி (20) தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வந்துள்ளார். அதே முட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மூவேந்தன், தங்கத்துரை இருவரும் சகோதரர்கள். இவர்களது மைத்துனர் ராஜ்குமார். மூன்று பேரும் கடந்த சில வருடங்களாக பாண்டிச்சேரியிலிருந்து சாராயம், மதுப்பாட்டில் கடத்தி வந்து வீட்டில் மறைத்து வைத்து விற்பனை செய்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கிராமத்தினர் பல முறை பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி இரவு 10.30 மணியளவில் மூவேந்தன், தங்கத்துரை, ராஜ்குமார் மூன்று பேரும் சேர்ந்து ஹரிஷ், ஹரிசக்தி இருவரையும் கத்தி மற்றும் அரிவாளில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் நிலை குலைந்து சரிந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அஜய் என்பவர் காயத்துடன் உயிர் தப்பினார். சாராய விற்பனை செய்வதை தட்டி கேட்டதால் இரட்டை கொலை நடந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
`புகார் கொடுத்த நபரை போட்டு கொடுத்ததே கொலைக்கு மூலக்காரணம்’
இதையடுத்து மூவேந்தன், தங்கத்துரை, ராஜ்குமார் ஆகிய மூவரையும் கைது செய்த போலீஸ், ஒரே பகுதியில் வசிக்கும் இளைஞர்களுக்கு இடையேயான முன்விரோதம் கொலைக்கு காரணம் என விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் சாராய விற்பனை தடுக்க வலியுறுத்தி பெரம்பூர் காவல் நிலையத்தில் பத்துக்கும் மேற்பட்ட புகார்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பெரம்பூர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நாகவள்ளி, புகார் கொடுத்த நபரை கொலையாளிகளிடம் போட்டு கொடுத்ததே கொலைக்கு மூலக்காரணம் என குற்றச்சாட்டு கிளம்பியிருப்பது அதிர்வலைகளை கிளப்பியுள்ளன.

`பயமின்றி வெட்டவெளியில் சாராய விற்பனை’
இது குறித்து முட்டம் கிராமத்தை சேர்ந்த இறந்த ஹரி சக்தியின் உறவினர் கரிகாலச்சோழன் நம்மிடம், மூவேந்தன், தங்கத்துரை, ராஜ்குமார் மூவரும் பல வருடங்களாக ஊருக்குள் சாராயம், மது விற்பனை செய்து வந்தனர். இதனால் எப்போதும் சண்டை, சச்சரவுமாக இருக்கும். ஏன் ஊருக்குள் விற்கிறீர்கள் என பல முறை தெரு மக்கள் கேட்டும் அவர்கள் அதை நிறுத்தவில்லை. ஒளிந்து, மறைந்து விற்பனை செய்தவர்கள் கடந்த ஒரு வருடமாக பயமின்றி வெட்டவெளியில் வைத்து விற்பனை செய்தனர். இன்ஸ்பெக்டர் நாகவள்ளிக்கு லாபத்தின் ஒரு பகுதியை மாமூலாக கொடுத்துள்ளனர் அதுவே துணிச்சலுக்கு காரணம்.
புகார் கொடுத்தவர்கள் மீது வன்முறை…
தெருவில் யார் தட்டி கேட்டாலும் உடனே மூன்று பேரும் சேர்ந்து கேட்டவரையும், அவர் வீட்டையும் அடித்து நொறுக்குவார்கள். இது போல் பத்து பேரை தாக்கியுள்ளனர். ஸ்டேஷனுக்கு சென்று புகார் கொடுத்துட்டு வீட்டுக்கு வர்றதுக்குள்ள மூவேந்தனுக்கு போனில் தகவல் சொல்லிடுவார் நாகவள்ளி. ஏண்டா ஸ்டேஷனுக்கு போனோம் என நினைக்கிற அளவுக்கு புகார் கொடுத்தவர் மீது மூன்று பேரும் அட்டூழியத்தை அரங்கேற்றுவர்.

சில மாதங்களுக்கு முன்பு பெண் ஒருவர், சாராயம் வித்து ஊரையே நாசமாக்குறீங்க, உங்களால பல குடும்பங்கள் தெருவுல நிக்குதுனு கத்தினார். அந்த பெண்ணை, பலர் முன்னிலையில் அடிச்சி ஓட விட்டாங்க. இதிலும், நாகவள்ளி நடவடிக்கை எடுக்கவில்லை. அவ்வப்போது, கண் துடைப்பிற்காக போலீஸ் ஊரில் ரெய்டு நடத்துவார்கள். சிறையிலிருந்து எளிதாக வெளியே வரும் வகையில் சாதாரண வழக்கை பதிவு செய்து கைது செய்வார்.
`இந்த சம்பவத்துக்கு முழுக்காரணம்…’
இதே போல், கொலை நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு ரெய்டுக்கு வந்த போலீஸ் ராஜ்குமாரை கைது செய்ததுடன் 75 மதுப்பாட்டிலையும் பறிமுதல் செய்தனர். அடுத்த நாளே மூவேந்தன் சாராயம் விற்றான். சாராயத்தை குடித்த சிறுமியின் அப்பா ஒருவர் வீட்டில் நிதானம் இல்லாமல் கிடக்க ஆத்திரத்தில் அந்த சிறுமி மூவேந்தன் தரப்பை திட்டினார். சிறுமிக்கு ஆதரவாக தினேஷிம் தட்டி கேட்டதுடன் ஸ்டேஷனுக்கும் தகவல் கொடுத்திருக்கிறார்.

தினேஷ் துப்பு கொடுத்ததை நாகவள்ளி, மூவேந்தனிடம் சொல்லி விட்டார். இந்த நிலையில் 14-ம் தேதி ராஜ்குமார் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வர மூவரும் தினேஷை தீர்த்துக்கட்டும் திட்டத்துடன் ஊருக்கு வந்துள்ளனர். அப்போது தெருவில் பேசிக்கொண்டு நின்ற தினேஷ், ஹரிஷ், ஹரிசக்தி, அஜய் ஆகியோரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் தினேஷ் அலறியடித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். தலைக்கேறிய போதையில் இருந்த மூவரும் எங்களை பத்தியா போட்டுக் கொடுக்குறீங்க, ஸ்டேஷனிலேயே எங்களுக்கு ஆள் இருக்குனு சொல்லிட்டு வெட்டி சாய்த்துள்ளனர். இதில் அப்பாவிகள் பலியானது தான் பெரும் சோகம். சாராய விற்பனையை தடுத்து முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் இரட்டை கொலை நடந்திருக்காது. இந்த சம்பவத்துக்கு இன்ஸ்பெக்டர் நாகவள்ளி தான் முழுக்காரணம்” என்றார்.
`சாராய விற்பனை செய்தவர்களிடம் கூட்டு’ -விசிக குபேந்திரன்
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை மண்டல செயலாளர் மயிலாடுதுறையை சேர்ந்த குபேந்திரன் நம்மிடம் பேசுகையில், “மயிலாடுதுறையில் கஞ்சா, மது விற்பனை கொடி கட்டி பறக்குது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடக்குது. கஞ்சா போதையில் பூங்காவில் ரகளை செய்த பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் மீட்ட சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. ஆனாலும் காவல் துறையில் இதை தடுக்க அக்கறை காட்டவில்லை. காரைக்கால் பார்டரிலிருந்து சாராயம் கடத்தி வந்து முட்டம் கிராமத்தில் விற்பனை செய்துள்ளனர். இது பெரம்பூர் இன்ஸ்பெக்டர் நாகவள்ளிக்கு தெரிந்தும் அலட்சியமாக இருந்துள்ளார்.

நாகவள்ளி மீது ஏற்கெனவே பல புகார்கள் உள்ளன. மாமூலுக்காக சாராய விற்பனை செய்தவர்களை கூட்டாளியாக்கி கொண்டு கண்ணியத்துடன் நடந்து கொள்ளாமல் செயல்பட்டிருக்கிறார். முன் விரோதம் தான் கொலைக்கு காரணம் என்று தங்கள் மீதுள்ள கரையை போலீஸ் துடைக்க பார்க்கிறார்கள். உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி கஞ்சா, மது விற்பனை இதனால் நடக்கும் கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டும்” என்றார்.
பெரம்பூர் இன்ஸ்பெக்டர் நாகவள்ளி
இது குறித்து பெரம்பூர் இன்ஸ்பெக்டர் நாகவள்ளியிடம் பேசினோம், முட்டம் கிராமத்தில் மது விற்பனை தொடர்பாக ஒரு புகார் கூட வந்ததில்லை. போலீஸாரால் கண்காணிக்கப்படும் ரெளடியான கனிவண்ணன் தரப்புக்கும், மூவேந்தன், தங்கத்துரை, ராஜ்குமார் தரப்புக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. அடிதடி, மோதல் வழக்கில் கனிவண்ணன் மீதும், மூவர் மீதும் வழக்கு பதிந்துள்ளேன். கனிவண்ணன் மீது வழக்கு போட்டதால் அவர் என் மீது காழ்ப்புணர்ச்சியில் இருந்து வந்தார். முன்பகை காரணமாக கனிவண்ணன் தரப்பைச் சேர்ந்த இருவரை கொலையாளிகள் கொலை செய்துள்ளனர்.

இதில் குற்றவாளிகள் மூவரை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்திருக்கிறோம். ஏற்கெனவே முட்டத்தில் மது விற்பனை செய்த மதனை குண்டாஸில் கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறேன். அவன் இப்போது ஊரிலேயே இல்லை. அதன் பிறகு ஒரு சதவீதம் கூட முட்டத்தில் மது விற்பனை நடக்கவில்லை. ஒரு சதவீதம் கூட மது விற்பனைக்காக இந்த கொலை நடக்கவில்லை. வழக்கு பதிவு செய்த காழ்ப்புணர்ச்சியில் கனிவண்ணன் தரப்பு என் மீது தவறான, பொய்யான குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். எஸ்.பி சார் எங்கள் பணிகளை கண்கொத்தி பாம்பாக கண்காணிக்கிறார்” என்றார்.
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
இந்த நிலையில் திருச்சி மண்டல ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார் நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் புதுச்சேரி மாநில எல்லைப் பகுதிகளான பெரம்பூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட நல்லாடை தரங்கம்பாடி சோதனைச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக், பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகவள்ளியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும் தஞ்சை மாவட்டம் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி என்பவரை பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமனம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.