டெல்லி நில அதிர்வு: 4.0 ரிக்டருக்கே கட்டிடங்கள் பயங்கரமாகக் குலுங்கியது ஏன்?

புதுடெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (பிப்.17) அதிகாலை 5.36 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. டெல்லியை மையமாகக் கொண்டு வட இந்தியா முழுவதும் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் உறுதியாகி உள்ளது.

நிலஅதிர்வின் தாக்கம் 4.0 ரிக்டர் என்றாலும் கூட கட்டிடங்கள் மிகப்பெரிய அளவில் குலுங்கியதால் டெல்லிவாசிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். ‘இது போல இதற்கு முன்பு உணர்ந்தது இல்லை. கட்டிடங்கள் பயங்கரமாகக் குலுங்கின’ என்று காசியாபாத் வாசி ஒருவர் ஊடகப் பேட்டியில் கூறியுள்ளார். இதுபோன்ற பாதிப்பினை ஏற்படுத்தும் நில அதிர்வுக்கு புவியியல் நிபுணர்கள் ‘ஆழமற்ற நிலநடுக்கம்’ ( shallow earthquake ) எனக் குறிப்பிடுகின்றனர். இதனைப் பற்றி சற்றே விரிவாகப் பார்ப்போம்.

ஆழமற்ற நிலநடுக்கம் என்றால் என்ன? ஆழமற்ற நிலநடுக்கமானது ( shallow earthquake ) பூமியின் மேற்பரப்பை ஒட்டிய பகுதியில் மையம் கொண்டிருக்கும். அதாவது பூமிக்கு கீழ் 5 முதல் 10 கிலோ மீட்டர் ஆழத்திலேயே மையம் கொண்டிருக்கும். இதனாலேயே இவை வழக்கமாக அதிக ஆழத்தில் மையம் கொண்டிருக்கும் நிலநடுக்கத்தைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

நிலநடுக்கத்தின் ஆழத்தைப் பொறுத்து புவியியல் நிபுணர்கள் அதனை வகைப்படுத்துகின்றனர். அதன்படி பூமிக்கு அடியில் 0 முதல் 70 கி.மீ ஆழம் வரை மையம் கொண்ட நிலநடுக்கங்களை ஆழமற்றவை அல்லது நடுத்தரமான நிலநடுக்கம் என்றும், 70 முதல் 300 கிமீ அழம் வரையில் மையம் கொள்ளும் நிலநடுக்கங்களை ஆழமானவை என்றும், 300 கிலோமீட்டரையும் கடந்த ஆழத்தில் மையம் கொள்பவற்றை மிக ஆழமான நிலநடுக்கம் என்றும் வரையறுத்து வைத்துள்ளனர். இதன்மூலம் டெல்லியில் ஏற்பட்ட நில அதிர்வு பூமிக்கு அடியில் 5.5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டதால், இதனை ஆழமற்றது, அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்று நாம் வகைப்படுத்தலாம்.

இந்தோனேசியா உதாரணம்: இத்தகைய, அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆழமற்ற நிலநடுக்கத்துக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை உதாரணமாகக் கூறலாம். இந்த நிலநடுக்கத்தில் 160 பேர் உயிரிழந்தனர். பல கட்டிடங்கள் தரைமட்டமாகின.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையமானது, “இத்தனை ரிக்டருக்கு மேல் பதிவாகும் நிலநடுக்கம்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றெல்லாம் உறுதியாகக் கூறிவிட முடியாது. நிலநடுத்தின் பாதிப்பு என்பது அது பூமியில் எத்தனை ஆழத்தில் மையம் கொள்கிறது, எந்த மாதிரியான மண் தன்மை கொண்ட நிலத்தில் அது ஏற்படுகிறது, அந்தப் பரப்பில் கட்டிடத்தின் உறுதித் தன்மை என்ன போன்ற பல காரணிகளையும் பொறுத்ததே அமைகிறது.” என்று தெரிவித்துள்ளது.

குண்டு வெடிப்பு போன்ற பாதிப்பு.. நிலநடுக்க பாதிப்பின் வீரியம் அதன் சக்தியைத் தாண்டி, அதன் மையப் புள்ளி, அதன் ஆழம் ஆகியனவற்றைப் பொறுத்தே அமைகின்றன. நிலநடுக்கம் பூமியின் ஆழத்திலும் மையம் கொள்ளலாம், நிலப்பரப்பின் அருகேயும் மையம் கொள்ளலாம். அந்த வகையில் ஆழமற்ற நிலநடுக்கங்கள் / நில அதிர்வுகள் ரிக்டரில் குறைந்த அளவில் இருந்தாலும் கூட அதன் பாதிப்பு அதிகமாக அமைந்து விடுகிறது.

ஆழமான நிலநடுக்கங்களில் இருந்து வரும் நில அதிர்வு அலைகள் மேற்பரப்பில் அதிக தூரம் பயணிக்க வேண்டும், வழியில் ஆற்றலை இழக்கின்றன. இதனாலேயே இத்தகைய நில அதிர்வுகளால் கட்டிடங்கள் குலுங்குவது அதிகமாக இருக்கிறது. இதனை ஒரு பெரிய நகரத்தின் கீழே குண்டு வைத்தால் எப்படி அதிர்வு இருக்குமோ அப்படிக் குலுங்கும் என்று புரிந்து கொள்ளலாம்.

பிரதமர் மோடி அறிவுறுத்தல்: இதற்கிடையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் “டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. அனைவரும் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க>> டெல்லியில் வலுவான நில அதிர்வு: ரிக்டரில் 4.0 ஆக பதிவு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.