சென்னை: மத்திய அரசின் மும்மொழி கொள்கையை திமுக எதிர்ப்பது, பாபா சாகிப் அம்பேத்கர் வகுத்து தந்த அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது என தெரிவித்துள்ள தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், தமிழகத்தில் திராவிட மொழிகளுக்குக்கூட இடமில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாய்மொழி தமிழோடு நம் குடும்பத்துப் பிள்ளைகள், தாங்கள் விரும்பும் மொழிகள் கற்பதை தமிழக அரசு தடுப்பது நியாயமா? தமிழ், ஆங்கிலத்தோடு, மூன்றாவது மொழியாக தெலுங்கு, மலையாளம், கன்னடம் அல்லது இந்தி ஆகிய மொழிகளில், தான் விரும்பும் மொழியைப் படிக்க அனுமதிக்க மாட்டேன் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறுவது பாபாசாகேப் அம்பேத்கர் வகுத்துத் தந்த அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது.
தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை, கிராமப்புற, மாணவர்களை முன்னேற விடாமல் தடுக்கும் வகையில் 1960 முதல் ஏமாற்றி மூளை சலவை செய்தது போல, தற்போதும் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசவிரோத, பிரிவினைவாத, மக்கள் விரோத அரசியல் செய்து, தமிழக மாணவர்களுக்கு துரோகம் செய்யும் முதல்வர் ஸ்டாலின் தன்னைத் தானே அப்பா என்று அழைத்துக் கொள்ள எந்தவித தகுதியும் இல்லாதவர்.
புதிய தேசிய கல்வி கொள்கையின்படி, அரசு பள்ளிகளை மேம்படுத்த, ‘பிஎம் ஸ்ரீ’ என்ற திட்டத்தை மத்திய பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதாக முதலில் ஒப்புக்கொண்ட திமுக அரசு, பிறகு மறுத்து விட்டது. ஆனால், திட்டத்திற்கான நிதியை மட்டும் கேட்கிறது. ஒரு திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியை, அத்திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே வழங்க முடியும் என்பது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் வாதம்.
தமிழகத்தில், இந்தியாவிற்கு எதிரான ஒரு எண்ணத்தை விதைத்து, பிரிவினைவாத சிந்தனையை மக்களிடம் எப்போதும் தக்க வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது திமுகவின் செயல்திட்டம். அதற்கு இதையொரு வாய்ப்பாக பயன்படுத்தி, மத்திய அரசு, இந்தியை திணிக்கிறது எந்த பொய் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.
புதிய தேசிய கல்விக் கொள்கையில், இந்தி மொழி எங்கும் கட்டாயமாக்கப்படவில்லை. மூன்றாவது மொழியாக இந்திய அரசியலமைப்பில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள, இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை படிக்கலாம் என்று தான் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் தெலுங்கு மொழி பேசுபவர்கள் 25 சதவீதம் இருக்கிறார்கள். கன்னடம், மலையாளம் பேசுபவர்களும் கணிசமாக இருக்கிறார்கள்.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை நடைமுறையில் இருந்தால், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி பேசுபவர்கள் அவரவர் மொழியை படிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். திராவிடம் என்பதை கட்சியின் பெயரில் வைத்திருக்கும் திமுக, திராவிட மொழிகளைக்கூட படிக்கும் வாய்ப்பை மறுப்பது ஏன்? தமிழகத்தில் திராவிட மொழிகளுக்குகூட இடமில்லையா?
தமிழக அரசு நடத்தும் பள்ளிகளை தவிர மற்ற அனைத்து பள்ளிகளிலும் மும்மொழிக் கொள்கை இருக்கிறது. தமிழகத்தில் திமுகவினர் பலர் சி.பி.எஸ்.இ. பள்ளிகளையும், சர்வதேச பள்ளிகளையும் நடத்துகிறார்கள். அதில் மூன்றாவது மொழியாக பெரும்பாலும் இந்தி தான் இருக்கிறது. திமுகவினர் உட்பட அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தமிழகத்தில் மும்மொழிதான் படிக்கிறார்கள்.
அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு, வசதி படைத்தவர்களின் பிள்ளைகளுக்கு கிடைக்கும் வாய்ப்பை, அரசு பள்ளிகளில் படிக்கும் சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு மட்டும் மறுப்பது ஏன்? மக்களிடம் மொழி உணர்வை தூண்டிவிட்டு, அரசியல் ஆதாயம் அடைவதற்காக, அரசு பள்ளி மாணவர்களை பலிகடா ஆக்குகிறது திமுக.
இந்த மொழி அரசியலை தமிழக மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். திமுகவின் மொழி அரசியல் இனியும் எடுபடாது. எனவே, தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திராவிட மொழிகளை கற்கும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். அதுவே அனைவருக்குமான நீதியாக இருக்க முடியும்.
மோடி அரசின் தொலைநோக்கு திட்டத்துடன் கூடிய நீட் கல்வி முறையை ஏற்றுக்கொண்டு கனவோடு இலட்சியத்தோடு படித்து வந்த தமிழக மாணவர்களை குழப்பி, நீட் தேர்வு விலக்கு கொண்டு வருவோம் என்று தேர்தல் பரப்புரையிலேயே ஏமாற்றியதோடு, மீண்டும் அதே பாணியில் மாணவர்களை ஏமாற்றும் விதமாக 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக மும்மொழி கொள்கையை தடுக்கு விதத்தில், போராட்டத்தையும் பொய் பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விட்டு, மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் திராவிட மாடல் மாடல் திமுக ஆட்சியின் சூழ்ச்சியை மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.