தமிழகத்தை ஒருபோதும் மிரட்டிப் பணியவைக்க முடியாது: துணை முதல்வர் உதயநிதி உறுதி

சென்னை: மும்மொழிக் கொள்கையை எதிர்த்து சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. தமிழகம் ஒருபோதும் மும்மொழியை ஏற்காது என ஆர்ப்பாட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

மும்மொழிக் கொள்கையை எதிர்த்தும் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டிப்பதாகவும் கூறி திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

மொழி, கல்வி, நிதி உரிமைக்காக போராட்டம் நடத்துகிறோம். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. பேரிடர் நிவாரணத்துக்காக முதல்வர் ரூ.6,675 கோடி கேட்டார். ஆனால் மத்திய அரசு ரூ.950 கோடிதான் தந்தது. அதுவும் தமிழக அரசுக்கு தர வேண்டிய மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்துதான் கொடுத்தார்கள். இந்தியை ஏற்காவிட்டால் கல்வித்துறைக்கு ரூ.2,190 கோடி தரமாட்டோம் என்கின்றனர்.

தமிழகத்தை ஒருபோதும் மிரட்டிப் பணியவைக்க முடியாது. தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் இருமொழிக் கொள்கையில் படித்தவர்களில் 99 சதவீதம் பேர் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர். இந்தியை அனுமதித்த ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் தங்களது தாய்மொழியை இழந்துள்ளன. தமிழகத்தில் அனுமதித்தால் அந்த மாநிலங்களின் நிலைதான் ஏற்படும்.

தமிழகம் ஒருபோதும் மும்மொழியை ஏற்காது. இந்தி திணிப்பைக் கைவிடாவிட்டால் இன்னொரு மொழிப் போரை சந்திக்க தமிழகம் தயங்காது. தங்கள் கட்சிப் பெயரில் அண்ணாவையும், திராவிடத்தையும் வைத்துள்ள அதிமுக எங்களைப் பற்றி அவதூறு பேசாமல், அரசியல் செய்யாமல் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தெருவில் வந்து போராட வேண்டும். தமிழகத்துக்கான நிதியைத் தராவிட்டால் இந்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் போராட்டக் களமாக மாறும். இந்தப் போராட்டம் முடிவுக்கு வருவதும் தொடர்வதும் மத்திய அரசின் கையில்தான் உள்ளது. இவ்வாறு உதயநிதி பேசினார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: மும்மொழிக் கொள்கைக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம் முதல் வாய்ப்பு. போர் சங்கு முழக்கம் என்கிற அளவில் அடுத்தகட்ட போருக்கு தயாராக வேண்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் விழாவில் அண்ணா பேசும்போது “எனது ஆட்சியில் நிகழ்த்தப்பட்டுள்ள 3 சாதனைகளை யாராலும் மாற்ற முடியாது. தமிழ்நாடு என்று பெயரிட்டது, சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கியது, இந்திக்கு இடமில்லை, தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கைதான்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: இப்போராட்டம் முடிவல்ல தொடக்கம். இந்தியை திணிப்பை மத்திய அரசு கைவிடாவிட்டால் முதல்வர் வெகுண்டு எழுவார். அவர் பின்னால் இண்டியா கூட்டணி அணிவகுக்கும்.

இதேபோல் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோர் பேசினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.