'தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்கும்' – மும்மொழிக் கொள்கை… சூடாகும் தமிழகம்!

சொந்த அரசியல் நலன்களுக்காக..!

பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் சேராததால், தமிழகம் உட்பட சில மாநிலங்களுக்கு எஸ்.எஸ்.ஏ நிதியை மத்திய நிறுத்தி வைத்திருக்கிறது. இதன்படி கடந்த 2023-24 கல்வியாண்டுக்கு ரூ.249 கோடி, 2024-25 கல்வியாண்டுக்கு ரூ.2,152 கோடி நிதியும் விடுவிக்கப்படவில்லை. இதனால் மாநில அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தசூழலில்தான் சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், ‘காசி தமிழ்ச் சங்கம் 3.0’ நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது. எனவே ரூ.2,152 கோடி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடம் இல்லை. இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு தமிழக அரசு செயல்பட வேண்டும். அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கின்றனர்.

தேசிய கல்விக் கொள்கை – 2020

தமிழக மக்களின் நலன்களை அவர்களுக்கு அக்கறையில்லை. நாடு முழுவதும் தேசியக் கல்விக் கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன. ஆனால் தமிழ்நாடு அரசு ஏன் ஏற்க மறுக்கிறது?. அந்த கொள்கைகள் என்ன தமிழ் மொழிக்கு எதிராகவா இருக்கிறதா?. பிராந்தியத்தில் பயன்படுத்தப்படும் மொழி, கல்வியில் பிரதான மொழியாக இருக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. அதை அவர்கள் எதிர்க்கின்றனரா?. இதையெல்லாம் சொந்த அரசியல் நலன்களுக்காக செய்து மக்களை குழப்பி வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை உள்ளது. அங்கு படிக்கும் மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுத் தேர்கின்றனர். இப்படியிருக்கும் சூழலில் ஏன் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளக் கூடாது?” என்றார்.

கொதித்த தமிழகம்…

இதற்கு தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “மும்மொழிக் கொள்கையை சட்டம் என்று ஒன்றியக் கல்வி அமைச்சர் கூறுகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது என்று கல்வி அமைச்சரால் கூற முடியுமா?. மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம். ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது தான் கல்வி. அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல. மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று மிரட்டும் தொணியை தமிழர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். எங்கள் உரிமையைக் கேட்கிறோம். உங்கள் தனிச்சொத்தைக் கேட்பது போல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்” என்றார்.

மு.க.ஸ்டாலின்

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்களை பார்க்காதீர்கள். மக்களைப் பாருங்கள். தேசிய கல்விக் கொள்கையை கடைபிடித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சொல்வதும், மும்மொழி கொள்கையை ஏற்க நிர்பந்திப்பதும் சரியல்ல. தமிழ்நாட்டில் என்றுமே இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும். அதில் எந்த மாற்றமும் கிடையாது” என்றார். இதேபோல் அரசியல்கட்சி தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “முதலமைச்சர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் மகன், மகள் அல்லது பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில், மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா?

தமிழகம் முழுவதும் தி.மு.கவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சிபிஎஸ்இ மும்மொழி பாடத்திட்டமே இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை? பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்?. தற்போது 2025-ம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும், உங்கள் 1960-களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்?” என தெரிவித்திருக்கிறார்.

அண்ணாமலை

இவ்வாறு இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “புதிய கல்விக் கொள்கை தாய் மொழியில் கற்பதை ஊக்குவிக்கிறது. மேலும் தமிழ் உலகத்தின் மிகவும் பழைமையான மொழியாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தமிழகத்தை சேர்ந்த ஒரு மாணவன் மூன்றாவதாக ஒரு மொழியை கற்பதில் என்ன தவறு இருக்கிறது. நாங்கள் மும்மொழிக் கொள்கையில் இந்தியை திணிக்கவில்லை. அதேநேரத்தில் புதிய கல்விக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் இதில் சிலர் அரசியல் செய்கின்றனர்” என்றார்.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் கல்வியாளர்கள், “மாநிலங்களிடம் வரி வசூலிக்கும் உரிமை இருந்தபோது கல்விக்கு தேவையான நிதியை ஒதுக்குவதில் சிக்கல் இல்லாமல் இருந்தது. பிறகு அந்த அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக்கொண்டுவிட்டது. இதையடுத்து கல்விக்கான நிதியையும் அவர்கள்தான் வழங்கி வருகிறார்கள். இதன் மூலமாகவே தற்போது நெருக்கடி கொடுக்கிறார்கள். ஆனால் மத்திய அரசு நிதியை மட்டுமே வழங்க முடியும். அதை மாநில அரசுகள் எப்படி செலவிட வேண்டும்?. அதற்கு எப்படி கல்வித் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. ஆனாலும் அவர்கள் அரசியல் செய்து வருகிறார்கள்” என்றனர்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.