புதுடெல்லி: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை நியமிப்பது குறித்த மத்திய அரசின் அறிவிப்பு ‘அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு’ என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. மேலும், தேர்தல் ஆணையரை பரிந்துரைக்கும் குழு குறித்த உச்ச நீதிமன்றத்தின் விசாரணையைத் தவிர்க்கவே பாஜக தலைமையிலான அரசு ஆர்வமாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் திங்கள்கிழமை நள்ளிரவில் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நள்ளிரவில் அவசர அவசரமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையால், புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது நமது அரசியலமைப்பின் புனிதத்துக்கு எதிரானது. மேலும், தேர்தல் நடைமுறை புனிதமானதாக இருக்க, தலைமைத் தேர்தல் ஆணையர் பாரபட்சமற்றவராக இருக்க வேண்டும் என பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
திருத்தப்பட்ட சட்டத்தின் படி, தலைமைத் தேர்தல் ஆணையரை நியமனம் செய்யும் குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, பிப்.19-ம் தேதி (புதன்கிழமை) உச்சநீதிமன்ற விசாரணை வரைக்கும் மத்திய அரசு காத்திருக்க வேண்டும்.
இன்று (திங்கள்கிழமை) அவசரமாக கூட்டத்தை நடத்தி, தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்க அவர்கள் எடுத்த முடிவு, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முன்பாக தேர்தல் நியமனத்தை செய்து முடித்துவிட வேண்டும் என்பதில் அவர்கள் ஆர்வமாக இருப்பதையே காட்டுகிறது.
இத்தகைய மோசமான நடத்தைகள், ஆளும் கட்சி எவ்வாறு தேர்தல் நடைமுறைகளை சீர்குலைத்தும், அவர்களின் வசதிக்கு ஏற்ப விதிகளை மாற்றுகிறது என்று பல முறை எழுப்பப்பட்ட சந்தேகங்களை உறுதிசெய்வதாகவும் உள்ளது. அது போலிவாக்காளர்கள் பட்டியலாக இருந்தாலும் சரி, பாஜகவுக்கு ஆதரவான தேர்தல் அட்டவணை அறிவிப்பாக இருந்தாலும் சரி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டது குறித்த கவலையாக இருந்தாலும் சரி மத்திய அரசும், அதனால் நியமிக்கப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணைாயரும் தீவிரமான சந்தேகத்துக்கு உள்ளாகிறார்கள்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சரியாக சுட்டிக்காட்டியது போல, நமது அரசியலமைப்பின் படி, இந்த பிரச்சினையில் உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும் வரை மத்திய அரசு காத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு: முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரதமர் அலுவலத்தில் நடந்த கூட்டத்தில், தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட சில மணி நேரத்துக்கு பின்பு, தலைமைத் தேர்தல் ஆணையராக அவரை நியமனம் செய்யும் உத்தரவு வெளியானது. என்றாலும் இதற்கு தேர்வு குழுவின் ஒரு உறுப்பினரான மக்களவைத் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தலை ஆணையரை நியமிக்கும் குழு தொடர்பான வழக்கு விசாரணை புதன்கிழமை (பிப்.19) நடைபெற இருப்பதால் இந்த கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் எதிர்ப்புக் குறிப்பு எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கலந்து கொண்டார்.
யார் இந்த ஞானேஷ் குமார்?: 1988-ம் ஆண்டு பேட்ச் கேரளாவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஞானேஷ்வர் குமார். இவர் கடந்த ஆண்டு தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன்பு கூட்டுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.
ஞானேஷ் குமார், கடந்த 2022-லிருந்து உள்துறை அமைச்சகத்தில் செயலாளராக பணியாற்றினார். ஐந்து ஆண்டுகள் உள்துறையில் பணியாற்றிய அவர், 2016, மே முதல் 2018, செப்டம்பர் வரை இணைச்செயலாளராகவும் 2018, செப்டம்பர் முதல் 2021 ஏப்ரல் வரை கூடுதல் செயலாளராகவும் பணியாற்றினார். கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டபோது ஞானேஷ் குமார் அங்குள்ள உள்துறை அலுவலத்தில் பணியாற்றினார். 2024ம் ஆண்டு அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.