தேசிய கல்வி கொள்கையை ஏற்காமல் நிதி தரமுடியாது என மத்திய அரசு அறிவிப்பு: சென்னையில் திமுக கூட்டணி கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை: தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளதற்கு தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன்தொடர்ச்சியாக திமுக கூட்டணி கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டத்தை அறிவித்துள்ளன.

இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் (திமுக), கி.வீரமணி (திக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்). வைகோ (மதிமுக), பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட்) , முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்), கே.எம்.காதர்மொகிதீன் (ஐயுஎம்எல்), திருமாவளவன் (விசிக), அருணாசலம் (மநீம), எம்.ஹெச்.ஜவாஹிருல்லா (மநேம), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), தி.வேல்முருகன் (தவாக) ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய மோடி அரசு எடுத்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக கல்வித்துறைக்கு நிதி தர முடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டுகிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்துக்கான நிதியைத் தருவதில் பாரபட்சம் காட்டி, பட்ஜெட்டில் தொடர்ந்து தமிழகத்துக்கான திட்டங்களைப் புறக்கணிக்கிறார்.

பதவிக்காலம் முடிந்துபோன ஆளுநரை வைத்துக் கொண்டு அத்துமீறல்கள், யுஜிசி மூலம் மாநிலத்தின் கல்விக் கட்டமைப்பைச் சிதைப்பதற்கான நடவடிக்கைகள், தொடர்ச்சியான திராவிட – தமிழ் வெறுப்பு நடவடிக்கைகள், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்புக்கான முன்னெடுப்புகள் என தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மோடி அரசை வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய சூழலை உருவாக்கி வருகின்றனர்.

தமிழர்கள் தனித்துவமானவர்களாக இருப்பதும் கல்வி – வேலைவாய்ப்பு – சமூகநீதி – வாழ்க்கைத்தரம் என அனைத்து வகையிலும் உயர்ந்திருப்பதும் மோடி அரசின் கண்களை உறுத்துகிறது. அது, அரசியல்ரீதியாகப் பாஜகவை அண்டவிடாத தமிழக மக்களின் மீது வெறுப்பை உமிழ்கிறது. பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் தமிழகத்தை வீழ்த்திவிட முயற்சிக்கிறது.

வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழகம் ஒன்றிணையும், எதிரி எந்த வடிவில் வந்தாலும் துணிந்து நிற்கும். அப்படியான ஒரு சூழலை வலிந்து உருவாக்கி வரும் மோடி அரசைக் கண்டித்து முதற்கட்டமாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (பிப்.18) மாலை 4 மணியளவில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.