தைபே நகரம்,
தைவான் ஜலசந்தியில் கனடாவின் போர்க்கப்பல் பயணித்ததை நேற்று சீன இராணுவம் கண்டித்தது. அமெரிக்க கடற்படை கப்பல்கள் இதேபோன்ற பயணத்தை மேற்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, சீனாவின் வான் மற்றும் கடற்படையினர் அந்த கப்பலை கண்காணித்து எச்சரித்ததாக கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க கடற்படையும், எப்போதாவது கனடா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நட்பு நாடுகளின் கப்பல்களும், சர்வதேச நீர்வழியாகக் கருதும் இந்த ஜலசந்தியை மாதத்திற்கு ஒரு முறை கடந்து செல்கின்றன. தைவானும் இதை ஒரு சர்வதேச நீர்வழியாகக் கருதுகிறது, ஆனால் தைவானை அதன் சொந்தப் பிரதேசமாகக் கூறும் சீனா, இந்த மூலோபாய நீர்வழி தனக்கு சொந்தமானது என்று கூறுகிறது.
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்தது. ஆனால் தைவானை சீனா இன்னும் தனது நாட்டின் ஒரு அங்கமாக கருதுகிறது. எனவே அதனை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடிக்கிறது. இதற்காக தைவான் எல்லைக்குள் போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி சீனா பதற்றத்தை தூண்டுகின்றது.
அதேபோல் வேறு எந்த நாடுகளும் தைவானுடன் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. இது சீன-அமெரிக்க உறவில் மேலும் விரிசல் ஏற்பட வழிவகுத்தது.
இந்தநிலையில் கனடாவின் போர்க்கப்பல் ஒன்று தைவான் ஜலசந்தியில் சென்றது. இதற்கு சீனா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தனது கடற்படை வீரர்களையும் சீனா குவித்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.