சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் பரித்கோட் மாவட்டத்தில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று வடிகாலில் கவிழ்ந்ததில் குறைந்தது 4 பேர் உயிரிழந்தனர் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காயமடைந்த 26 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் பிரக்யா ஜெயின் கூறுகையில், பஸ் அமிர்தசரஸ் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கோட்கபுரா சாலைக்கு அருகே பாலத்தில் இருந்த வடிகாலில் கவிழ்ந்தது. அந்த பஸ்சை வடிகாலில் இருந்து வெளியே எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காயமடைந்த 26 பயணிகள் பரித்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றார்.