புதுடெல்லி,
இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ராஜீவ் குமார் உள்ளார். தேர்தல் கமிஷனர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் உள்ளனர். தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு 65 வயது நிரம்பியதால் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) அவர் பணி ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து புதிய தலைமை தேர்தல் கமிஷனரை தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் உறுப்பினராக உள்ள உள்துறை மந்திரி அமித்ஷா, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் புதிய தலைமை தேர்தல் கமிஷனர் பதவிக்கு 5 பேர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, அதில் ஞானேஷ்குமார் பெயர் இறுதி செய்யப்பட்டதாகவும், அது தொடர்பான பரிந்துரையை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பப்பட்டதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. இந்த பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஷ்குமாரை நியமித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஞானேஷ்குமார் நாளை (புதன்கிழமை) பதவியேற்கிறார். நாளை முறைப்படி பதவியேற்கும் ஞானேஷ்குமார், 2029-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வரை இப்பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த ஞானேஸ்குமார்?
1988 ஆவது பேட்ச் கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ஞானேஷ்குமார், கேரள மாநில நிதித் துறை, பொதுப் பணித் துறைகளின் செயலாளர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இதையடுத்து, மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்ட ஞானேஷ் குமார், மத்திய உள் துறை, பாதுகாப்புத் துறை, நாடாளுமன்ற விவகாரத் துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி உள்ளார். கடந்த ஜனவரி 31ஆம் தேதியுடன் பணிஓய்வு பெற்ற நிலையில், அவர் தலைமை தேர்தல் ஆணையராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், 1989ஆவது பேட்ச் ஹரியானா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான விவேக் ஜோஷி, தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.