சென்னை: சென்னை மின்ட் பகுதியில் நார்த் வால் சாலையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பொதுக்கழிப்பிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 53-வது வார்டு, மின்ட் பகுதியில் உள்ள நார்த் வால் பகுதியில் தலா 9 இருக்கைகளுடன் ஆண் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக இரு பொதுக்கழிப்பிடங்கள் இயங்கி வருகின்றன. இந்த பொதுக்கழிப்பிடத்தை இடிக்க மாநகாரட்சி அதிகாரிகள் நேற்று காலை, உரிய வாகனங்களுடன் அங்கு வந்தனர். கழிப்பிடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நார்த் வால் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், அவர்களை சமாதானம் செய்து, இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, மாநகராட்சியின் வடக்கு வட்டார துணை ஆணையரிடம் நேரம் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.
இப்போராட்டம் குறித்து, அப்பகுதி மக்கள் கூறும்போது, இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள பொதுகழிப்பிடம் 40 ஆண்டுகளுக்கு மேலாக இங்கே இயங்கி வருகிறது. நாங்கள் அனைவரும் இதை தான் நம்பி இருக்கிறோம். எங்கள் வீடு மிகவும் சிறியது என்பதால், அங்கு கழிப்பறை, குளியளறை போன்றவற்றை அமைக்க வசதிகள் இல்லை.
அதனால் பொதுக்கழிப்பிடத்தை இடிக்க கூடாது என ஏற்கெனவே மாநகராட்சி வார்டு கவுன்சிலர், பொறியாளரிடம் மனு அளித்தோம். அங்கு சமுதாய நலக்கூடம் கட்ட திட்டமிட்டு, பொதுக்கழிப்பிடத்தை இடிப்பதில் உறுதியாக உள்ளனர். இதை கண்டித்து மறியலில் ஈடுபட்டோம். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.