சென்னை: குழந்தைகளுக்கு விருப்பமான மூன்றாம் மொழி குறித்த தரவுகளைப் பெறும் கையெழுத்து இயக்கம் மார்ச் 1-ம் தேதி முதல் நடத்தப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியில், இந்தி உள்ளிட்ட ஏதேனும் ஒரு விருப்பமொழியைப் பயிற்றுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார். இவ்வாறு, சிபிஎஸ்இ பள்ளி நடத்தி, தனது பிள்ளைகளை வெவ்வேறு மொழிகளைப் படிக்க வைத்துவிட்டு, எந்த அர்த்தத்தில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் 2 மொழியைப் படிக்க வேண்டும் என்கின்றனர்.கலாநிதி வீராசாமி எம்.பி. நடத்தும் மெட்ரிக் பள்ளியில் தமிழ் கட்டாயமல்ல. தமிழகத்தில் மார்ச் 1 முதல் மூன்றாவது மொழியாக எந்த மொழியைப் படிக்க குழந்தைகளுக்கு ஆர்வம் இருக்கிறது என்பதை கையெழுத்து இயக்கம் நடத்தி குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்போம்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு தமிழாசிரியர்கள் வேண்டும் என்று கோரி நாளை காலை கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் கடிதம் எழுதினால், மாலையிலேயே உரிய நடவடிக்கை எடுப்போம். இதை சவாலாக கூறுகிறேன். தமிழகத்துக்கு 100 கேந்திரிய வித்யாலயா பள்ளி, நவோதயா பள்ளிகளைக் கொண்டு வருவோம். இதற்கான இடம் ஒதுக்க அமைச்சர் தயாரா? தமிழகத்தில் 30 லட்சம் பேர் மும்மொழிக் கொள்கையை படிப்பதாக, தமிழக அரசு மழுப்பலாக பதில் அளிக்கிறது. இந்த விவகாரத்தில் அரசு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். இந்தி திணிப்பு கிடையாது. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.