Tamil Cinema: “மலையாளம், தெலுங்கு சினிமா போல தமிழ்ச்சினிமா ஒரு குடையின் கீழ் இல்லை'' – வசந்த பாலன்

மலையாள திரையுலகமும் தெலுங்கு திரையுலகமும் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இங்கே தமிழ்சினிமா ஒரு குடையின் கீழ் இல்லாமல் இருப்பதாகத் தோற்றமளிப்பதாகவும், இயக்குநர் வசந்த பாலன் முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

அந்த முகநூல் பதிவில், “நேற்று பிரபல திரைத்துறை நண்பர்களுடன் நீண்டநேரமாக தமிழ்ச்சினிமா குறித்து உரையாடிக்கொண்டிருந்தேன். இடைவிடாது தொடர்ந்து வரும் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்கள் மீது மக்களுக்கு ஒருவித சலிப்பு ஏற்பட்டு விட்டதாக விவாதம் துவங்கியது. அதற்கு பல படங்களை உதாரணமாகக் காட்டத் துவங்கினார்கள். வன்முறை அதீதம் குடும்பங்கள் சென்று படம் பார்க்க முடியாதபடி மாறி விட்டதைப் பற்றியும் பேச்சு வளர்ந்தது.

வசந்த பாலன்

இன்னொரு திரை ஆய்வாளர் திரைப்படங்களில் போதனைகளும் அரசியலும் அதிகமாக பேசப்படத் துவங்கியக் காரணத்தினால் பொழுதுபோக்கு அம்சங்கள் மிக மிக குறைந்துவிட்டன என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனால்தான் 12 வருடங்கள் கடந்து வெளிவந்த மத கஜ ராஜா திரைப்படமும், கலகலப்பான குடும்பஸ்தன் திரைப்படமும் திரையரங்கில் பெரும் வெற்றி அடைகின்றன என்பதையும் குறிப்பிட்டார். ஒருவிதத்தில் உண்மையை ஒத்து கொள்ளத்தானே வேண்டும். சினிமா ரொம்பவும் ஜனநாயகமாகி விட்டதே பெரும் ஆபத்தாகத் தமிழ்ச் சினிமாவைச் சூழ்ந்திருக்கிறதோ என்று சினிமா ஆய்வாளர் ஒருவர் கூறினார்.

சினிமாவிற்கான அடிப்படைப் பயிற்சிகள் எதுவுமின்றி யார் வேண்டுமானாலும் திரைத் தயாரிப்புக்குள்ளே குதிக்கலாம் இயக்கலாம் என்பது அதிகமானது தான் இந்த தோல்விகள் அதிகமானதிற்கும் ஒரு காரணம் என்றார். minimum professionalism ஒரு திரைப்பட உருவாக்கத்திற்கு அத்தியாவசியத் தேவை என்பதை வலியுறுத்தினார். வருடத்திற்கு 250 திரைப்படங்கள் தயாராகிற தமிழ் சினிமாவில் வருடத்திற்கு மக்கள் விரும்புகிற ரசித்து கொண்டாடுகிற இரண்டு மூன்று பொழுதுபோக்குத் திரைப்படங்கள் வந்தாலே மிகப்பெரிய விஷயம் என்று நிலமை ஆகிவிடுகிறது.

அதையும் தாண்டி தமிழ் சினிமா தனி மரமாக இருக்கிறது தோப்பாக இல்லை என்பதையும் தெரிவித்தார் நடிகர் பகத் பாசில் ஒரு பேட்டியில் அடுத்த 10 ஆண்டுகளில் மலையாள சினிமா எல்லா ஜானர் வகைப் படங்களையும் வெற்றிகரமாகத் தயாரிக்கிற இந்திய சினிமாவின் முகமாக மாறும் அதற்கு அத்தனை பெரிய நடிகர்களும் இயக்குநர்களுக்கும் கதாசிரியர்களுக்கும் துணை நிற்போம் என்பதை மிக மகிழ்ச்சியாக பெருமையாக நம்பிக்கையுடன் ஒரு பேட்டியில் தெரிவிக்கிறார் என்று விவாதத்தில் திரை எழுத்தாளர் ஒருவர் கூறினார்.

தமிழ் சினிமா

மலையாள திரையுலகமும் தெலுங்கு திரையுலகமும் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இங்கே தமிழ்ச்சினிமா ஒரு குடையின் கீழ் இல்லாமல் இருப்பதாகத் தோற்றமளிக்கிறது. நடிகர்கள் தனித்தனி மரமாகவும் தயாரிப்பாளர்கள் தனி மரமாகவும் இயக்குநர்கள் தனி மரமாகவும் இருக்கிறார்கள். தனி மரங்கள் தோப்பாக மாற வேண்டிய நேரம் வந்தே விட்டது. அனைவரும் கைகோர்த்து நிற்க வேண்டிய காலம் எப்போதோ வந்து விட்டது. காலம் தாழ்த்தாமல் கை கோர்ப்போம். இந்த பதிவைப் படிக்கும் நண்பர்கள் நீ பொழுதுபோக்கு சினிமா எடுடா என்ற கேள்வியை என் மீது வைத்தால் சரிதான் இந்த கேள்வி எனக்கும் சேர்த்து தான் என்பதை எண்ணியே இதைப் பதிவிடுகிறேன்.” என்று வசந்த பாலன் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.