வாஷிங்டன்: “இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும்? அவர்கள் வசம் அதிக அளவில் பண பலம் உள்ளது.” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அண்மையில் எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DOGE) வெளிநாடுகளுக்கு அளித்து வரும் நிதி உதவியில் சுமார் 723 மில்லியன் டாலர்களை குறைத்துள்ளதாக அறிவித்தது. இதில் இந்தியாவுக்கு வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா வழங்கி வந்த 21 மில்லியன் டாலர் நிதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசுத் துறையின் இந்த நகர்வை அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆதரித்துள்ளார்.
“இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும்? அவர்கள் வசம் அதிக அளவில் பண பலம் உள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரையில் உலக நாடுகளில் அதிகம் வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அங்கு நாம் செல்வது அரிது. ஏனெனில் அங்கு வரிகள் மிகவும் அதிகம்.
பிரதமர் நரேந்திர மோடி மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால், வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க நாம் ஏன் 21 மில்லியன் டாலரை வழங்க வேண்டும்?” என ட்ரம்ப் கூறியுள்ளார். இதன் போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் அவர் சுட்டிக்காட்டியதாக தகவல்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுள்ளார். அரசின் செயல்திறன் துறைக்கான தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்கை அவர் தேர்வு செய்தார். அரசு நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் வீணான செலவினங்களைக் கட்டுப்படுத்துவது தான் இந்த துறையின் நோக்கம். அதன்படி அமெரிக்க அரசின் செயல்திறன் துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்று தான் அண்மையில் வெளிநாடுகளுக்கு அளித்து வரும் நிதி உதவியை குறைத்ததும், ரத்து செய்த நடவடிக்கையும் பார்க்கப்படுகிறது.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரான பொருளாதார நிபுணர் சஞ்சீவ் சன்யால், இந்தியாவுக்கான நிதியைக் ரத்து செய்யும் அமெரிக்க அரசின் செயல்திறன் துறை முடிவு குறித்து ‘மனித குல வரலாற்றில் இது மிகப்பெரிய மோசடி’ என விமர்சித்திருந்தார். இந்த நிலையில் தான் இந்தியாவுக்கு நிதி உதவி வழங்குவது குறித்து அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.