உ.பி.யின் 75 சிறைகளில் உள்ள 90 ஆயிரம் கைதிகள் திரிவேணி சங்கம நீரில் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் உள்ள 7 மத்திய சிறைகள் உட்பட மொத்தம் 75 சிறைகளில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். மகா கும்பமேளாவை முன்னிட்டு, சிறைக் கைதிகள் திரிவேணி சங்கம நீரில் குளிப்பதற்கான ஏற்பாடுகளை மாநில நீர் மேலாண்மை துறை செய்துள்ளது.
இதுகுறித்து மாநில சிறைத் துறை அமைச்சர் தாரா சிங் சவுகான் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்திலிருந்து புனித நீர் அனைத்து சிறைகளுக்கும் கொண்டுசெல்லப்படும். இதற்கான ஏற்பாடுகளை நீர் மேலாண்மை துறை மேற்கொள்ளும். அவ்வாறு கொண்டுவரப்படும் புனித நீர் அந்தந்த சிறை வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் கலக்கப்பட்டு, கைதிகள் அதில் நீராட அனுமதிக்கப்படுவர். இந்த நிகழ்ச்சி 21-ம் தேதி காலை 9.30 முதல் 10 மணி வரை நடைபெற உள்ளது” என கூறப்பட்டுள்ளது.