எடப்பாடிக்கு பாராட்டு விழா… தவிர்த்த செங்கோட்டையன்
சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கலந்துக்கொள்ளவில்லை. இது அ.தி.மு.க-வுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “அத்திக்கடவு – அவிநாசி திட்டக்குழு நடத்திய பாராட்டு விழாவை நான் புறக்கணிக்கவில்லை. என்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் படங்கள் வைக்கப்படாததால் பங்கேற்கவில்லை” என்றார்.

இது அ.தி.மு.க-வுக்குள் புயலைக்கிளப்பியது. இதற்கு விளக்கமளித்த ஜெயக்குமார், “நிகழ்ச்சி விவசாயக் கூட்டமைப்புகளால்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அ.தி.மு.க சார்பில் பாராட்டு விழா நடந்திருந்தால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டிருக்கும்” என்றார்.
பிறகு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய செங்கோட்டையன், “நான் செல்லும் பாதை எம்.ஜி.ஆர், ஜெயலிலதா வகுத்துக் கொடுத்த பாதை. என்னைச் சோதிக்காதீர்கள். இதை நான் வேண்டுகோளாக வைக்கிறேன்” என பேசினார்.
`நான் ஒரு சாதாரண தொண்டன்’
மேலும் அந்த நிகழ்ச்சியில் எடப்பாடியின் பெயரையும் குறிப்பிடவில்லை. இது தமிழக அரசியல் களத்தில் விவாதத்தைக் கிளப்பியது. இந்தச்சூழலில் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அ.தி.மு.க மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியானது. அதில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், தம்பிதுரை, செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட தலைவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதில் செங்கோட்டையனின் பெயர் இடம்பெறவில்லை. இது அ.தி.மு.க-வுக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகிய மூவரையும் கட்சியில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நான் எங்கும் பேசவில்லை. அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து வெற்றியை பெற்று உள்ளோம். சில துரோகிகளால் அங்கு தோல்வி ஏற்பட்டது எனக் கூறினேன். மேற்கொண்டு நான் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. நான் ஒரு சாதாரண தொண்டன்” என்றார்.
ஆரம்பத்தில் புயலைக்கிளப்பிய செங்கோட்டையன் திடீரென ‘நான் ஒரு சாதாரண தொண்டன்’ எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து, ‘எடப்பாடி எதிர்ப்பிலிருந்து பின்வாங்குகிறாரா அவர்?’ என்கிற கேள்வியுடன் மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம், “இது நான் எதிர்பார்த்த ஒன்றுதான். சமீபகாலமாக கட்சியில் செங்கோட்டையன் ஓரம் கட்டப்பட்டு வந்தார். மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா புகழை மறைக்கும் விதமாக எடப்பாடி புகழை மட்டுமே பாடி வருகிறார்கள்.

மேலும் ஈரோடு கிழக்கு தேர்தலில் நிற்க வேண்டாம் என்ற முடிவையும் செங்கோட்டையனை கேட்காமலேயே எடப்பாடி எடுத்தார். அவருடைய தொகுதியில் நிர்வாகிகள் நியமத்திலும் எந்த கருத்தும் கேட்கவில்லை. இந்த சம்பவங்கள் அனைத்தும் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கு வருத்தத்தை கொடுத்தது. அதை எதிர்ப்பு குரல் மூலமாக எடப்பாடிக்கு வெளிப்படுத்தினார். பதிலுக்கு எடப்பாடியும் அவரை சமாதானம் செய்துவிட்டார்.
அதேநேரத்தில் எடப்பாடியிடம் சண்டைபோட வேண்டிய தேவை செங்கோட்டையனுக்கு இல்லை. தான் அலட்சியப்படுத்தப்பட்டு வருகிறோம் என்கிறதை எட்டப்பாடியின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும் என நினைத்தார். அதை செய்துவிட்டார். அதேநேரத்தில் செங்கோட்டையனிடம் சண்டைபோட வேண்டும் என்கிற எண்ணம் எடப்பாடிக்கும் கிடையாது. ஏனெனில் ஏற்கெனவே ஓபிஎஸ், சசிகலா, டிடிவி போன்றவர்கள் வெளியில் இருக்கிறார்கள். இந்த சூழலில் செங்கோட்டையனையும் பகைத்துக்கொண்டால் தனக்கு மேலும் பலவீனம்தான் என்பதும் எடப்பாடிக்கு தெரியும்.

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அரசியலில் இருக்கிறார். அனைத்தையும் செங்கோட்டையன் பார்த்துவிட்டார். எனவே தற்போது சண்டைபோட விரும்பமாட்டார். ஆனால் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என விரும்புகிறார். வரும் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என நினைக்கிறார். அதேநேரத்தில் அவரால் பாதிப்பு ஏற்பட விரும்பமாட்டார். எனவே எடப்பாடிக்கு எதிராக கலகக்குரல் தூக்க மாட்டார். இதற்கு பின்னால் பா.ஜ.க இருப்பதாக சொல்வதில் துளியும் உண்மை இல்லை. அவர்கள் எடப்பாடிக்கு ஒரு கால் செய்தால் போதுமானது. அதோடு ஆப் ஆகிவிடுவார் எடப்பாடி. அது வராத வரையில் பேசிக்கொண்டு இருப்பார். செங்கோட்டையன் மூலமாக பேச வேண்டிய அவசியம் பா.ஜ.க-வுக்கு இல்லை. வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் பா.ஜ.க-வுடன் நேரடி தொடர்பில் இருக்கிறார்கள்” என்கிறார்,
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play
