சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலைமை… புதிய வீடியோவை வெளியிட்டு எச்சரித்த அமெரிக்கா

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்ற பின்னர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அறிவித்தார். அதன்படி சட்டவிரோதமாக தங்கி இருந்த பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

அந்த வகையில் அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி வசித்து வந்த இந்தியர்கள் பலர் ‘சி-17’ ரக ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த 4-ம் தேதி காலை டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 5-ம் தேதி மதியம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரை வந்தடைந்தது. அரியானா மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்த தலா 33 பேர், பஞ்சாப்பை சேர்ந்த 30 பேர், உத்தரபிரதேசம் மற்றும் மராட்டியத்தை சேர்ந்த தலா 3 பேர், சண்டிகாரை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 104 பேர் விமானத்தில் வந்தனர். அவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.

இதனிடையே இந்தியர்கள் 104 பேரும் கைகளில் விலங்கு பூட்டப்பட்டும், கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டும் விமானத்தில் அழைத்து வரப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இது தொடர்பான வீடியோ சமூக வலைத் தளங்களில் வெளியாகியதால் கடும் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்தனர்.

இதற்கு மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் திருப்பி அனுப்பப்படுபவர்களை விமான பயணத்தின்போது எந்த வகையிலும் தவறாக நடத்துவதை தவிர்ப்பது குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் பேசி வருகிறோம் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இந்த நிலையில், சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலைமை என்று புதிய வீடியோ ஒன்றை அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களின் கைகளில் அதிகாரிகள் கைவிலங்கிட்டு, கால்களில் சங்கிலி கட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவிற்கு எலான் மஸ்க் “ஹாஹா வாவ்” என கமெண்ட் செய்துள்ளார். இது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.