சென்னை: சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் கோர மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாநகப் பகுதியில் 207 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 982 குடியிருப்புகள் கட்டப்பட்டு, பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகளில் வசிப்போர் முறையாக பராமரிப்பு கட்டணங்களை செலுத்துவதில்லை. தங்கள் பகுதிகளையும் தூய்மையாக பராமரிப்பதில்லை.குடியிப்பு வாசிகள் ஒன்றிணைந்து செயல்படுவதில்லை என்பதால் அரசு அறிவுறுத்தியவாறு குடியிருப்போர் நலச் சங்கங்களை அமைத்து, அப்பகுதியில் நிலவும் பிரச்சினைகள், சிறு, சிறு பராமரிப்பு பணிகளைக்கூட மேற்கொள்வதில்லை.
அவர்களே ஜன்னல் வழியே வீட்டு கழிவுகளை வீசி எறிவது, கழிவுநீர் குழாய் உடைந்தாலும் மாற்றாமல் இருப்பது போன்ற காரணங்களால் இவ்வாரிய குடியிருப்பு பகுதிகள் குப்பை காடாகவும், கழிவுநீர் தேங்கியும் அசுத்தமாக காட்சியளிக்கின்றன என அவர்கள் தரப்பிலேயே குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்நிலையில் அப்பகுதிகளை பாரமரிப்பது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி தலைமையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று (பிப்.18) சென்னையில் நடைபெற்றது.
இதில் மாநகரப் பகுதிகளில் உள்ள அனைத்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளிலும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பு, எஸ்பிஐ காலனி, தலயங்குப்பம், மணலி புதுநகர் பகுதியில் பேஸ்-2 பகுதி, வியாசர்பாடி சத்யமூர்த்திநகர், உதயசூரியன் நகர் பகுதிகள் உள்ளிட்டவற்றில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக நேற்று தற்காலிகமாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இப்பணி அடுத்த ஒரு வாரத்தில் முடிக்க திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “துணை முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, சென்னை மாநகரில் உள்ள 207 திட்டப் பகுதிகளில் தூய்மைப் பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளும். அதற்காக மாநகராட்சி மதிப்பீடு செய்து வழங்கும் தொகையை, வாரியம் வழங்கும். இப்பணிகளுக்காக விரைவில் மாநகராட்சி டெண்டர் கோர உள்ளது.
தற்போது தற்காலிகமாக மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை கொண்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. டெண்டர் நடவடிக்கைகள் முடிந்ததும், ஒப்பந்ததாரரிடம் பணிகள் வழங்கப்படும்” என்றனர்.