புதுடெல்லி: டெல்லி துணை நிலை ஆளுநரை நேரில் சந்தித்த ரேகா குப்தா ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
டெல்லியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டார். வியாழக்கிழமை (பிப்.20) முதல்வராக பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பாஜகவின் 48 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இதில் டெல்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான மத்திய பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ரவிசங்கர் பிரசாத், ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர். இதில் டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டார்.
இதனையடுத்து துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்ஸேனாவை நேரில் சந்தித்த ரேகா குப்தா டெல்லியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்த சந்திப்பின் போது அவருடன் பாஜக மூத்த தலைவர்கள் ரவிசங்கர் பிரசாத், ஓம் பிரகாஷ் தன்கர், டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா உள்ளிட்டோர் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரேகா குப்தா, “இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய பிரதமர் மோடிக்கும், டெல்லி பாஜக உயர்மட்ட தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். 27 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. இது நாட்டின் அனைத்து பெண்களுக்கும் பெருமை சேர்க்கும் தருணம் இது. நாங்கள் ஆட்சியைமைக்க உரிமை கோரியுள்ளோம். பாஜகவின் ஒவ்வொரு உறுதிமொழியையும் நிறைவேற்றுவது தான் எனது வாழ்க்கையின் இறுதி இலக்கு” என்று தெரிவித்தார்.
டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் நாளை மாலை 4.00 மணிக்கு துணைநிலை ஆளுநர் புதிய முதல்வர் ரேகா குப்தாவுக்கு பதவி ஏற்பு செய்து வைக்கிறார். இவருடன் புதிய அமைச்சர்களும் இதே மேடையில் பதவி ஏற்க உள்ளனர். இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், திரை நட்சத்திரங்களுடன் முக்கியத் துறவிகளும் கலந்து கொள்கின்றனர்.
வாசிக்க > டெல்லியின் அடுத்த முதல்வர் – யார் இந்த ரேகா குப்தா?