திருப்பதி ஏழுமலையானை ஆண்டுக்கு சராசரியாக 2.5 கோடி பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர் என்று தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் சர்வதேச கோயில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சி நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. இதில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல்பாடு குறித்து அதன் கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி பேசியதாவது:
நாட்டில் உள்ள அனைத்து கோயில்களை விட, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகம் ஒரு முன்மாதிரியாக விளங்கி வருகிறது. திருமலைக்கு ஆண்டுக்கு சராசரியாக 2.5 கோடி பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். திருப்பதி தேவஸ்தானம் தனது 66 பிரிவுகள் மூலம் பக்தர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது.
சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்கின்றனர். பக்தர்களுக்கு அன்னதானம், சுத்தமான சுற்றுச்சூழல், அடிப்படை வசதிகள் போன்றவற்றை தேவஸ்தானம் செய்து வருகிறது.
பக்தர்கள் 63 காத்திருப்பு அறைகளில் காத்திருந்து சுவாமியை தரிசிக்கின்றனர். கியூ லைன் நிர்வாகம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. சாதாரண பக்தர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்காக வார நாட்களில் அதிகபட்சமாக 12 மணி நேரமும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 17 நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது. திருமலையில் 7,600 தங்கும் அறைகளும், 5 சத்திரங்களும் உள்ளன. சராசரியாக தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம்.
அன்னப்பிரசாதம் வழங்க 3 சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் 3.5 லட்சம் லட்டு பிரசாதங்கள் விநியோகம் செய்ய தயார் நிலையில் வைக்கப்படுகின்றன.
ஏழுமலையானின் தரிசனம், தங்கும் விடுதி, இலவச அன்ன பிரசாதம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மட்டுமல்லாமல், இதர தார்மீக, சமூக, வளர்ச்சி பணிகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.
திருப்பதி தேவஸ்தானம் என்பது வெறும் கோயில்கள் பராமரிக்கும் ஒரு அறக்கட்டளை நிறுவனம் மட்டுமல்ல. இதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களும் அமல் படுத்தப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் சனாதன தர்மத்தை பரவலாக கொண்டு செல்ல, அன்னய்யா, தாச சாகித்தியம், ஆழ்வார் திவ்யபிரபந்தம், இந்து தர்ம பிரச்சாரம் உட்பட மேலும் பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் ஸ்ரீ வெங்கடேஸ்வர பக்தி சேனல் செயல் பட்டு வருகிறது. 6 மொழிகளில் ‘சப்தகிரி’ மாத பத்திரிக்கை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், 14 மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களும் செயல்பட்டு வருகின்றன.
தினமும் 1,914 துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 207 கழிப்பறை பிளாக்குகள் உள்ளன. தினமும் 90 டன் குப்பை சுத்தம்செய்யப்பட்டு திருமலையில் மறுசுழற்சிக்கு தயார் நிலையில் வைக்கப்படுகின்றன.
திருமலையில் தர்ம ரதம் மூலம் பக்தர்களுக்கு இலவச போக்குவரத்து வசதியை செய்து வருகிறோம். தினமும் ஆந்திர அரசு பேருந்து மூலம் பக்தர்கள் திருமலைக்கு வந்தடைகின்றனர். சராசரியாக தினமும் 1,600 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறப்பு நாட்களில் 2,400 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 35 கல்வி நிறுவனங்கள் மூலம் சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவியர் கல்வி கற்று வருகின்றனர். நாடு முழுவதும் திருப்பதி தேவஸ்தானத்துக்கு 61 கோயில்கள் உள்ளன. 4 கோசாலைகள் தேவஸ்தானம் சார்பில் பராமரிக்கப்படுகின்றன.
வேத மற்றும் வாரிசு அடிப்படையில் 8 அறக்கட்டளைகள் உள்ளன. 7,000 தேவஸ்தான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை தவிர ஒப்பந்த ஊழியர்கள், ஸ்ரீவாரி சேவகர்கள், விஜிலென்ஸ் துறையினர் என மேலும் பலர் தினமும் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.
ஏழைகளுக்கு பள்ளிகள், முதியோர், அனாதை விடுதிகள், தங்கும் வசதியுடன் கல்வி கற்று தரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பால மந்திரம், காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோருக்கான பள்ளிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. திருப்பதி தேவஸ்தானம் அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கி செயல்படுத்தி வருகிறது.
வரப்போகும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் அனைத்து சேவைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும். மேலும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும். தகவல் தொழில்நுட்பம் மூலம் சேவைகள் அனைத்தும் 100 சதவீதம் பக்தர்களிடையே சென்றடைய திருமலை திருப்பதி தேவஸ்தானம் முயற்சி செய்து வருகிறது. இவ்வாறு கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி பேசினார்.