‘பழனிசாமி முதல்வர்… விஜய் துணை முதல்வர்!’ – கிஷோர் யோசனையை கிரகிப்பாரா விஜய்?

மத்தியில் ஆளும் பாஜக-வும் மாநிலத்தை ஆளும் திமுக-வும் தான் எங்களின் எதிரிகள் என பிரகடனம் செய்திருக்கும் நடிகர் விஜய், தனது தலைமையை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணிக்கும் தயார் என அறிவித்திருக்கிறார். தவெக தலைமையில் தான் கூட்டணி என்ற விஜய்யின் அந்த கொள்கை முடிவுக்கு தற்போது ஆபத்து வந்திருக்கிறது.

அரசியல் எதிர்காலம் கருதி இந்த விஷயத்தில் சமரசம் செய்து​கொள்ள வேண்டிய நிலை வந்துள்ளதால் கொள்கையா, கூட்டணியா என்று முடிவெடுக்க முடியாத குழப்​பத்தில் விஜய் இருப்பதாக கூறுகிறார்கள்.

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்​செய​லாளரான ஆதவ் அர்ஜுனா ஏற்பாட்டில் 2026 தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க பிரசாந்த் கிஷோர் தவெக-வுடன் கைகோத்​திருக்​கிறார். அவர் தான், நிரந்தர வாக்கு வங்கியை கையில் வைத்திருக்கும் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்தால் தான் திமுக-வை வீழ்த்த முடியும்.

அதற்கு விஜய் தன்னை சமரசம் செய்து​கொள்ள வேண்டும் என்ற யோசனையை தெரிவித்​திருக்​கிறார். இது தொடர்பாக அதிமுக தரப்பிலும் கிஷோர் ஒருசுற்று பேசி இருப்​ப​தாகச் சொல்கிறார்கள்.

“குறைத்துப் பார்த்​தாலும் அதிமுக-வுக்கு தற்போது 25 சதவீத வாக்குகள் இருக்​கும்” என்று சொல்லி இருக்கும் பிரசாந்த் கிஷோர், தவெக-வுக்கு அதிகபட்சம் 20 சதவீத வாக்குகள் கிடைக்​கலாம் என்பதையும் உறுதிபட தெரிவித்​திருக்​கிறார். இத்தோடு அதிமுக கூட்ட​ணியில் இருக்கும் பிற கட்சிகளின் வாக்கு​களையும் சேர்த்தால் மொத்த வாக்குகள் 50 சதவீதத்தைத் தாண்டி விடும். அதை வைத்தே ஆட்சியைப் பிடிக்​கலாம் என்பது விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் போட்டுக்​காட்டிய கணக்கு என்கிறார்கள்.

முதல்வர் கனவில் இருக்கும் விஜய்க்கு, ஆந்திர அரசியலை சுட்டிக்​காட்டிய பிரசாந்த் கிஷோர், நாயுடு​வும், நடிகர் பவன் கல்யாணும் கூட்டணி அமைத்து சாதித்ததை தெளிவுபடுத்​தியதாக தெரிகிறது. அதே ஸ்டைலில் பழனிசாமி முதல்வர், விஜய் துணை முதல்வர் என்ற ஒப்பந்​தத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்றும் யோசனை சொல்லி இருக்​கிறார்.

ஆனாலும் இந்த ஃபார்​முலாவை ஏற்றுக் கொள்வதில் விஜய்க்கு இன்னமும் தெளிவு பிறக்க​வில்லை என்கிறார்கள். ஆனால், அதிமுக – தவெக தொண்டர்கள் இப்போதே அத்தகைய கூட்டணி அமைந்​து​விட்ட உற்சாகத்தில் இருக்​கிறார்கள்.

இதுகுறித்து பேசிய தவெக தம்பிகள் சிலர், “2026 தேர்தலை எதிர்​கொள்வது குறித்து வியூக வகுப்பாளர்கள் உள்ளிட்ட பலரிடமும் தளபதி ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டணியை பேசிமுடிக்கும் பொறுப்பை பிரசாந்த் கிஷோரிடமும் ஆதவ் அர்ஜு​னா​விடமும் ஒப்படைத்​திருக்கிறார்.

அவர்கள் கூறும் யோசனைகளை அவர் நிச்சயம் ஏற்றுக்​கொள்​வார். 2026-ல் கூட்டணி ஆட்சிக்கு சம்மதித்​தாலும் அடுத்த தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்​குமளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறவேண்டும் என நினைக்​கிறார் விஜய். அதற்கு முன்னோட்டமான இந்தத் தேர்தலில் கடைசி நேரத்தில் பொது எதிரியை வீழ்த்த அவர் சில சமரசங்களை செய்து​கொள்ளவும் தயாராகவே இருப்​பார்” என்றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.