கத்தார் மன்னரும், நாட்டின் அதிபருமான ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி 2 நாள்கள் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு நேற்று வந்தார். அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை, மத்திய அமைச்சர்கள் அல்லது வெளியுறவுத்துறை அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்பது வாடிக்கை.
ஆனால் கத்தார் மன்னரை, பிரதமர் மோடி நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்றுள்ளார். முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய கத்தார் மன்னருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட கத்தார் மன்னரை ஆரத் தழுவி பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று அழைத்துச் சென்றார்.
தனது 2 இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின்போது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை சந்தித்து கத்தார் மன்னார் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
கடந்த 9 ஆண்டுகளில் முதல்முறையாக கத்தார் மன்னர் இந்தியாவுக்கு வந்துள்ளார். இதற்கு முன்பு முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாகா, அதிபர் டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் ஜாயேத் அல் நஹ்யான் உள்ளிட்டோரை பிரதமர் மோடி நேரில் சென்று விமானநிலையத்தில் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் கூறும்போது, “எனது சகோதரர் கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை வரவேற்க விமானநிலையம் சென்றிருந்தேன். இந்தியாவில் மேற்கொண்டுள்ள அவரது பயணம் பயனளிக்க வாழ்த்துகிறேன். நாளை அவரைச் சந்திக்க ஆவலாக உள்ளேன்” என்றார்.