லக்னோ: “தவறான புனைவுகளால் மகா கும்பமேளாவை அவமதிக்க எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிகளை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். முன்னதாக, மகா கும்பேமேளாவை ‘மரண கும்பமேளா’ என மேற்கு வங்க முதல் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து இருந்தது கவனிக்கத்தக்கது.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் உரையாற்றிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத், “மகா கும்பமேளா வெறும் மத நிகழ்வு மட்டுமல்ல. அது இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தின் சின்னம். மகா கும்பமேளா குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்புகின்றன. சனாதன தர்மம் என்பது இந்தியாவின் ஆன்மா, அதன் கண்ணியத்தை நிலைநிறுத்துவது நமது கடமை. பொய்யான கதைகளால் மகா கும்பமேளாவை, சனாதன தர்மத்தை அவமதிக்க எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிகளை பொறுத்துக்கொள்ள முடியாது.
வரலாற்று சிறப்புமிக்க மகா கும்பமேளாவை பிரம்மாண்டமானதாக மாற்ற எனது அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் புனித நிகழ்வை சீர்குலைக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். மகா கும்பமேளாவின் ஆன்மிக மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை புறக்கணித்து, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அதற்கு எதிராக தவறான பிரச்சாரத்தை பரப்பி வருகின்றன” என்று ஆவேசமாக தெரிவித்தார்.
இதனிடையே, சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சிகள், “மகா கும்பமேளாவில் கடந்த ஜனவரி 29-ம் தேதி நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்துக் காட்டுகிறது. சரியான திட்டமிடல் இல்லாததே இத்தகைய உயிரிழப்புகளுக்குக் காரணம். இதற்கு முதல்வர் யோகி ஆதித்யாநாத் பொறுப்பேற்க வேண்டும்” என வலியுறுத்தின.