கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவ மாணவியர், கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று நாகர்கோவிலில் இருந்து கேரளா பதிவெண் கொண்ட டூரிஸ்ட் பஸ்ஸில் சுற்றுலா சென்றுள்ளனர். மாணவ, மாணவியர் உட்பட 42 பேர் பஸ்ஸில் சுற்றுலா சென்றனர். திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து கொல்லத்துக்குச் சென்றுவிட்டு இன்று காலை 7 மணியளவில் மூணாறு சென்றனர். அங்கிருந்து குண்டள அணைக்கட்டுக்கு செல்லும்போது மதியம் 2 மணி அளவில் மாட்டுப்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்தது. அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவிகள் வெனிகா, ஆதிகா ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். வெனிகா கனகப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், ஆதிகா திங்கள்நகர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தனர். அவர்களை தேனி மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது சுதன்(19) என்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 18 பேர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வளைவான சாலையில் அதி வேகமாக பஸ்ஸை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பஸ் டிரைவரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா சென்ற மாணவ, மாணவிகள் விபத்தில் சிக்கிய சம்பவம், கன்னியாகுமரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.