திருப்பூர்: வேலை தேடி திருப்பூருக்கு குடும்பத்துடன் ரயிலில் வந்த ஒடிசாவைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பிஹாரைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 17-ம் தேதி திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலை தேடி ஒடிசா மாநிலத்தில் இருந்து 27 வயதுடைய பெண் தனது கணவர் மற்றும் 3 வயது பெண் குழந்தையுடன் ரயிலில் திருப்பூர் வந்தார். திருப்பூரில் வேலை தேடி அலைந்துள்ளனர். ஆனால் எங்குமே வேலை கிடைக்காத நிலையில் புஷ்பா ரயில்வே சந்திப்பு அருகே நின்றிருந்தனர். இதனை நோட்டமிட்ட பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது நதிம் (24), முகமது டேனிஸ் (25) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் தங்களின்பனியன் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை எனக் கூறி, லட்சுமி நகர் பகுதியில் உள்ள அவர்கள் தங்கியிருந்த அறைக்கு இளம் பெண் உள்பட 3 பேரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.
இரவு தங்கள் அறையில் தங்கிக் கொள்ளலாம் என ஆறு பேரும் இரவு உணவு உட்கொண்டு விட்டு அறையில் தூங்கி உள்ளனர். அப்போது 3 வயது குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி பெண்ணை 3 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வெளியில் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கிருந்து வெளியேறிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீஸார் முகமது நதிம், முகமது டேனிஸ் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்டவர்கள் மீது உயிர் பயம் ஏற்படுத்துதல் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.