தமிழ் பத்திரிகையில் புகைப்படக்காரராகத் தன் பயணத்தைத் தொடங்கி, அரசியல் முதல் சினிமா வரை பல்துறை ஆளுமைகளிடம் பேரன்பைப் பெற்ற போட்டோகிராபர் ‘கலைமாமணி’ யோகா.
கலைஞர் கருணாநிதியின் பர்சனல் ஒளி ஓவியராகவும் கவனம் ஈர்த்தவர். இயக்குநர் பாரதிராஜாவின் குட் புக்கில் இருந்து வரும் யோகா, சமீபத்தில் ‘இயக்குநர் இமயத்துடன் 25 வருட இனிய நினைவுகள்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். சமீபத்தில் நடந்த இதன் வெளியீட்டு விழாவிற்கு, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் எனப் பலரும் பங்கேற்றனர்.

இயக்குநர் பாரதிராஜாவுடனான நட்பு குறித்து யோகாவிடம் கேட்டோம். நெகிழ்ச்சியுடன் அவர் பகிர்ந்தவை இதோ!
”என்னோட சின்ன வயசுல இருந்து சினிமா படங்கள் அதிகம் பார்ப்பேன். என்னோட கல்லூரிப் படிப்பை 1967ல முடிச்சேன். அதன்பிறகு சென்னையில் ஜெமினி கலர் லேப்பில் பிராஸிசிங்ல வேலை செய்துட்டு இருந்தேன். இங்கே சென்னையில் என்னோட உறவினர் சங்கர், நடிகர்கள் சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசனுக்கு பர்சனல் போட்டோகிராபராக இருந்தவர். நாடகங்கள்ல பாடக்கூடியவராகவும் இருந்தவர் அவர். எனக்கு நேரம் கிடைக்கையில் சங்கரோட ஸ்டூடியோவுக்குப் போயிடுவேன். போட்டோகிராபி எனக்கும் பிடிபட்டுடுச்சு. நானும் படங்கள் எடுப்பேன். அதை அவரும் என்கரேஜ் பண்ணுவார். அவரோடு பயணிக்கும்போது அன்றைய பிரபலங்கள் என் உறவினருக்குக் கொடுக்கும் மரியாதையைப் பார்த்து, எனக்கு இந்த துறை மீது ஆர்வம் அதிகமானது.
பத்திரிகையாளர் பால்யூ மூலமாக ‘குங்குமம்’ ஆசிரியர் பாவைச் சந்திரன் சார் நட்பு கிடைத்தது. புகைப்படக்காரராக பிஸியானேன். அவருக்கு நேரம் கிடைக்கையில் என்னையும் சினிமாக்களுக்கு அழைத்துப் போவார்.
அப்படி ஒரு முறை ’16 வயதினிலே’ படத்தைப் பார்த்தோம். அந்தப் படம் வெளியாகி சில நாட்களுக்குப் பிறகு பேசப்பட்ட படமாக ஆனதால், போய் பார்த்தோம். அந்த படத்தை நைட் ஷோ பார்த்துட்டு ‘யார் இந்த பாரதிராஜா?’னு வியந்து மணிக்கணக்காக பேசினோம். அதில் இருந்து டைரக்டர் மீது பெரிய ஈர்ப்பு வந்துடுச்சு.
அதன் பிறகு பாவை சார் கூப்பிட்டு, ‘பாரதிராஜாவுக்கு பையன் பிறந்திருக்கான். படம் எடுத்துட்டு வந்திடுங்க’ன்னு அசைன்மென்ட் கொடுத்து அனுப்பினார். அந்த நிகழ்வுக்குப் பிறகு டைரக்டரை அடிக்கடி சந்திக்கிற வாய்ப்பு அமைந்தது. அவரையும் இயக்குநர் சிகரம் பாலசந்தரையும் வைத்துப் படங்கள் எடுத்திருக்கேன். பாரதிராஜா சாரோட ஒளிப்பதிவாளர் மறைந்த பி.கண்ணன், சார் நட்பினால் ‘கேப்டன் மகள்’ படத்துக்கு ஸ்டில் போட்டோகிராபராக வேலை கிடைத்தது. கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் டைரக்டரோடு பழகுற அருமையான நல்வாய்ப்பு கிடைச்சது. எனக்கும் டைரக்டருக்கும் ஒரே அலைவரிசை என்பதால், அவருக்கும் என் மீதான பிரியம் அதிகமானது. அந்தப் பிரியம் 25 ஆண்டுகள் கடந்தும் தொடர்கிறது. அவருடைய அமெரிக்கப் பயணத்திற்கும் என்னை அவர் கூட்டிட்டுப் போயிருக்கார்.

டைரக்டரோடு பார்த்த, பாதித்த விஷயங்களை அவ்வப்போது குறித்து வைத்துக் கொண்டே வந்தேன். அதனை தான் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கேன். இந்த விழாவிற்கு பாரதிராஜா சாரின் மனைவி வந்திருந்தாங்க. வெளி இடங்களுக்கு அவ்வளவாக செல்லாத அவங்க வந்திருந்திருந்தாங்க. விழாவிற்கு அவங்களும், மகன் மனோஜின் மனைவி, மலேசியாவில் இருந்து டைரக்டரின் மகள் ஜனனி, என் மனைவியார், பத்திரிகையாளர் கிரிஜா ராகவன் எனப் பெண்கள் அனைவரும் சேர்ந்து குத்துவிளக்கு ஏத்தினாங்க. இதைப் பார்த்து, ‘இத்தனை பேரையும் இங்கே பார்க்கறது சந்தோஷமாக இருக்குது’னு கே.பாக்யராஜ் சார் சொன்னார்.
சில வாரங்களுக்கு முன்னர் பாரதிராஜா சாரை நானும் நல்லி குப்புசாமி செட்டி சாரும் சேர்ந்து போய் நலம் விசாரிச்சோம். அவர் நல்லி சார்கிட்ட, ‘நான் யோகாவுக்கு முன்னாடி போய் சேர்ந்திடணும்’னு சொல்லி நா தழுதழுத்திருக்கார். என் மீது அவர் வைத்திருக்கும் அன்பு அளப்பரியது. அதை யாருக்குமே கிடைக்காத ஒரு பாக்யமாக நினைக்கறேன்.” என்று நெகிழ்கிறார் யோகா.