இம்பால்: அனைத்து சமூக குழுக்களைச் சேர்ந்த மக்களும் தங்களிடம் உள்ள சட்டவிரோத ஆயுதங்களை 7 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா கெடு விதித்துள்ளார். மேலும், அவ்வாறு ஒப்படைப்போருக்கு தண்டனைகள் வழங்கப் படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மணிப்பூர் ஆளுநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மாநிலத்தில் இயல்புநிலை திரும்ப வேண்டும் என்ற பெரும் ஆர்வத்தில் மக்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும் விதமாக இங்குள்ள அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் தங்களுக்குள்ள விரோதங்களை நிறுத்திவிட்டு சமூகத்தில் அமைதி மற்றும் சட்டம் – ஒழுங்கை பராமரிக்க முன்வர வேண்டும்.
இந்த விஷயத்தில், அனைத்து சமூக மக்களிடமும் அதிலும் குறிப்பாக பள்ளத்தாக்கு மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் தாமாக முன்வந்து தங்களிடம் உள்ள சட்டவிரோத, கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை அருகில் உள்ள காவல் நிலையம், புறக்காவல்நிலையம், பாதுகாப்பு படை முகாம்களில் இன்றிலிருந்து அடுத்த ஏழு நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று நான் மனதார கேட்டுக்கொள்கிறேன்.
ஆயுதங்களை ஒப்படைக்கும் உங்களின் இந்த ஒற்றைச் செய்கை அமைதியை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான சக்திவாய்ந்த அம்சமாக இருக்கும். இந்த காலக்கட்டத்துக்குள் தங்களின் ஆயுதங்களை ஒப்படைப்பவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று நான் உறுதியளிக்கிறேன். காலக்கெடுவுக்கு பின்பு அத்தகைய ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பிரகாசமான எதிர்கால உறுதி மற்றும் நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து மாநிலத்தை மீண்டும் உருவாக்குவோம். தாமாக முன்வந்து அமைதியைத் தேர்ந்தெடுங்கள்’ என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட ஒரு வாரத்துக்கு பின்பு ஆளுநர் பல்லாவின் இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இனக் கலவரத்தால் மணிப்பூர் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து முதல்வர் பிரேன் சிங் தனது அமைச்சரவையுடன் பிப்.9-ம் தேதி ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாநில சட்டப்பேரவையை கலைத்து உத்தரவிட்டார்.
வடகிழக்கு மாநிலத்தில் கடந்த 2023 மே மாதத்தில் பழங்குடிகளான குகி ஸோ மற்றும் மைத்தேயி சமூகத்துக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தீவிரமடைந்து இனக்கலவரமாக மாறியது. இதில் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கனக்கான மக்கள் வீடிழந்து இடம்பெயர்ந்து செல்ல நிர்பந்திக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.