இந்தியா போராடி வெற்றி; கில் நிதான சதம் – பாகிஸ்தான் போட்டியில் செய்ய வேண்டியது என்ன?

India vs Bangladesh: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் நேற்று தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று குரூப் ஏ-வில் இடம்பெற்றிருந்த இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி 228 ரன்களை குவித்தது. ஹ்ரிதோய் சதம் அடித்த நிலையில்,  இந்திய அணி பந்துவீச்சில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

India vs Bangladesh: ரோஹித் சர்மா அதிரடி தொடக்கம்

229 ரன்கள் இலக்குடன் ரோஹித் சர்மா – சுப்மான் கில் ஜோடி களமிறங்கியது. டஸ்கின் அகமது – முஷ்பிகுர் ரஹ்மான் தொடக்க கட்ட ஓவர்களை வீசினர். ரோஹித் சர்மா வழக்கம்போல் அதிரடி தொடக்கத்தை கைக்கொண்டார். பவர்பிளேவை சாதகமாக்கி பவுண்டரிகளை பறக்கவிட்டார்.

India vs Bangladesh: சுழலுக்கு உதவிய ஆடுகளம்

இருப்பினும் முதல் பவர்பிளேவின் கடைசி ஓவரான 10வது ஓவரில், டஸ்கின் அகமது பந்துவீச்சில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் உள்பட 41 ரன்களை அடித்திருந்தார். இதன் பின் களமிறங்கிய விராட் கோலி பெரிதும் நிதானம் காட்டினார். நீண்ட நேரத்திற்கு பிறகே அவருக்கு ஒரு பவுண்டரி கிடைத்தது. ஆடுகளம் மெதுவாக இருக்கவே, சுழற்பந்துவீச்சு பெரிதாக கைக்கொடுத்தது. சுழற்பந்துவீச்சை எதிர்த்து விளையாட விராட் கோலி மற்றும் சுப்மன் கில் இருவரும் தயங்கினர். நிதானமாக ஒவ்வொரு ரன்களாக எடுத்து வந்தனர்.

India vs Bangladesh: சொதப்பிய விராட், ஷ்ரேயஸ், அக்சர்

இருப்பினும், ரிஷாத் ஹோசைன் பந்துவீச்சில் விராட் கோலி பாயின்ட் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 38 பந்துகளில் 1 பவுண்டரி உள்பட 22 ரன்களையே அடித்திருந்தார். விராட் கோலிக்கு பின் வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 15(17), அக்சர் பட்டேல் 8(12) ரன்களை எடுத்து வெளியேறினர்.

India vs Bangladesh: சுப்மன் கில் நிதான சதம்

5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சுப்மன் கில் – கேஎல் ராகுல் ஜோடி விக்கெட்டை விடாமல் விளையாடியது. சில கேட்ச் மற்றும் ரன்அவுட் வாய்ப்புகளை வங்கதேசம் தவறவிடவே இந்திய அணிக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது. சுப்மான் கில் 125 பந்துகளில் சதம் அடித்தார். இது அவரது 8வது ஓடிஐ சதமாகும். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின் அதிகமான பந்துகளில் சதம் அடித்தது இதுதான் என்கிறது புள்ளிவிவரம்.

India vs Bangladesh: ஆட்ட நாயகன் சுப்மன் கில்

சுப்மன் கில் காட்டிய நிதானமும் அவருக்கு கேஎல் ராகுல் பக்கபலமாக இருந்ததும் இந்திய அணிக்கு 46.3 ஓவர்களில் இலக்கை அடைய உதவியது. கில் 101(129), ராகுல் 41(47) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரிஷாத் 2, டஸ்கின் மற்றும் முஷ்பிகுர் ரஹ்மான் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். கடினமான சூழலில் சதம் அடித்து வெற்றிகரமாக இலக்கை அடைய உதவிய சுப்மன் கில்லுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

CT 2025. India Won by 6 Wicket(s) https://t.co/ggnxmdGyLi #BANvIND #ChampionsTrophy

— BCCI (@BCCI) February 20, 2025

ICC Champions Trophy: பாகிஸ்தான் போட்டியில் செய்ய வேண்டியது என்ன?

வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி, பாகிஸ்தானை இதே மைதானத்தில் சந்திக்க உள்ளது. அன்றைய போட்டியில் விளையாட இருக்கும் ஆடுகளமும் இதேபோன்று மெதுவாக இருக்குமா என்பது தெரியாது. இருப்பினும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பலமான பிளானை இந்திய அணி கொண்டு வர வேண்டும். அடுத்த போட்டியில் குல்தீப் யாதவிற்கு பதில் வருண் சக்ரவர்த்தி விளையாட வாய்ப்புள்ளது. 

வேகப்பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங்கையும் முயற்சிக்கலாம். ஆனால், ஹர்ஷித் ராணாவே தொடர்வார் எனலாம். பாகிஸ்தான் போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். ரோஹித் சர்மா பவர்பிளேவில் இதேபோன்று அதிரடி காட்டுவது நலம். விராட் கோலி லெக் ஸ்பின் மட்டுமின்றி சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டியதும் அவசியமாகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.