காசா: காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், தாய் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் உட்பட 4 இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் உடல்களை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஹமாஸ் இன்று ஒப்படைத்தது.
போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து இறந்தவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்படுவது இதுவே முதல்முறை. இறந்த பிணைக்கைதிகளின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகளை செஞ்சிலுவை சங்கத்தினர் இஸ்ரேலிடம் ஒப்படைத்தனர். அவர்களின் உடல்களை இஸ்ரேல் பெற்றுக்கொண்டதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் உறுதிபடுத்தியுள்ளது.
இறந்தவர்களில், பிபாஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஷிரி பிபாஸ் (32) அவரது மகன் ஏரியல் மற்றும் கஃபிர் ஆகியோரும் அடங்குவர். இவர்களில் ஏரியல் மற்றும் கஃபிர் கடத்தப்பட்ட போது அவர்களின் வயது முறையே நான்கு மற்றும் ஒன்பது மாதங்கள். இவர்களுடன் ஓய்வு பெற்ற பத்திரிகையாளர் லிஃப்ஷிட்ஸ் உடலும் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 2023 நவம்பரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பிபாஸ், அவரது குழந்தைகள் மற்றும் லிஃபஷிட்ஸ் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்தனர். உடல்களைச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைப்பதற்கு முன்பாக ஹமாஸ் ஒரு அறிக்கையில், “பிணைக்கைதிகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு தங்களின் சக்திக்கு உட்பட்ட அனைத்து விஷயங்களையும் செய்தோம். இஸ்ரேலின் கொடூரமான மற்றும் தொடர்ச்சியான குண்டுவீச்சு தாக்குதல்களால் அவர்களைப் பாதுகாப்பதும், மீட்பதும் முடியாமல் போய்விட்டது” என்று தெரிவித்துள்ளது
அதேபோல், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கு விடுத்துள்ள செய்தியில், “தன்னுடைய பிரஜைகளைப் பற்றிக் கவலைப்படாத ஒரு தலைமையால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்கள்” என்று தெரிவித்துள்ளது.
இறந்தவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்படுவதை பார்க்க காசாவின் கான் யூனிஸ் நகரின் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். கறுப்பு நிற உடையில் தங்களை முழுமையாக மறைத்த நிலையில் இருந்த ஹமாஸ்கள் உடல்கள் அடங்கிய பெட்டிகளைக் கொண்டு வருவதைப் பார்த்தனர்.
அந்த மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த போஸ்டர்களின் அருகில் ஆயுதமேந்திய நிலையில் ஒரு ஹமாஸ் போராளி நின்றிருந்தார். அந்தப் போஸ்டர்கள் ஒன்றில், இஸ்ரேலிய கொடிகள் போர்த்தப்பட்ட சவப்பெட்டிகளின் முன்னால் ஒரு மனிதன் நின்று கொண்டிருக்கின்றார். அவரின் கால்கள் இருக்கும் இடத்தில் வேர்கள் நிலத்தில் ஊன்றி இருக்கின்றது. அது இந்த நிலம் பாலஸ்தீனியர்களுக்கானது என்பதன் குறியீடு.
மற்றொரு போஸ்டரில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கோரை பற்களுடன் ஒரு ரத்தக்காட்டேரியாக சித்தரிக்கப்பட்டுள்ளார் அவர் மீது பிபாஸ் குடும்பத்தினர் உட்பட உடல்கள் ஒப்படைக்கப்பட்ட நான்கு பேரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், “போர் குற்றவாளியான நெதன்யாகு மற்றும் அவரது நாஜி ராணுவம் இவர்களை போர் விமானங்கள் மூலம் ஏவுகணை வீசிக் கொன்றது.”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.