“இஸ்ரேல் படையினரை வாபஸ் பெறவில்லை என்றால்…” – ஹமாஸ் எச்சரிக்கை

இஸ்ரேல் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட 2 குழந்தைகள், அவர்களது தாய் உட்பட 4 பேரின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று ஒப்படைத்தனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் ஒவ்வொரு வாரமும் மூன்று, நான்கு பேராக விடுவித்து வந்தனர். பதிலுக்கு நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்து வந்தது. இதுவரை 24 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் உயிருடன் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் சிரி பிபாஸ் என்ற பெண், அவரது இரண்டு குழந்தைகள் ஏரியல் மற்றும் கபிர், லிப்சிட்ஸ் (83) என்பவரின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் நேற்று ஒப்படைத்தனர். இதில் கபிர் 9 மாத குழந்தை. இந்த குழந்தைதான் பிடித்துச் செல்லப்பட்டவர்களில் மிகவும் இளம் வயதான பிணைக்கைதி. இந்த 4 பேரும் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில், பாதுகாவலர்களுடன் சேர்த்து கொல்லப்பட்டனர் என ஹமாஸ் தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.

கான் யூனிஸ் பகுதியில் ஒப்படைக்கப்பட்ட இந்த 4 சவப்பெட்டிகளை இஸ்ரேலிடம் செஞ்சிலுவை சங்கம் ஒப்படைத்தது. இந்த உடல்களில் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டு, இறுதி அறிவிப்பு குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்படும். பிணைக் கைதிகளின் சவப்பெட்டிகள் ஒப்படைப்பு காட்சியை இஸ்ரேல் டி.வி.சேனல்கள் எதுவும் ஒளிபரப்பவில்லை.

30 குழந்தைகள் உட்பட 250 இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். சண்டை நிறுத்த ஒப்பந்தம் மற்றும் இதர ஒப்பந்தங்கள் மூலம் பாதிக்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் மீட்கப்பட்டனர். இஸ்ரேல் ராணுவத்தினரின் தேடுதல் வேட்டையில் 8 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டனர். தாக்குதலில் அல்லது பாதுகாப்பில் இருந்தபோது உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டன.

இருதரப்பினர் இடையே சண்டை நிறுத்தம் தொடருமா என தெரியவில்லை. இந்நிலையில் 6 பிணைக் கைதிகளை நாளை உயிருடன் விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் 4 பிணைக் கைதிகளின் உடல்களை அடுத்த வாரம் ஒப்படைப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். சண்டை நிறுத்தத்தை நீட்டித்து, இஸ்ரேல் படையினரை வாபஸ் பெறவில்லை என்றால், மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க மாட்டோம் எனவும் ஹமாஸ் அமைப்பினர் கூறியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.