சென்னை: மாநில அரசுகளின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஓய்வூதியத் திட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களை ஆய்வு செய்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டம் இன்று (பிப்.20) நடைபெற்றது. கூட்டத்தில் பேராசிரியர் ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, ழான் த்ரேஸ், அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்.நாராயண் மற்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச்செயலர் நா.முருகானந்தம், நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “தமிழக அரசின் அடுத்த பட்ஜெட் வரும் மார்ச் 14-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஒரு கோடியே 14 லட்சத்து 59 ஆயிரம் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் அனைவருக்கும், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை வழங்கி வருகிறோம். இத்திட்டத்தின், வெளிப்படையான மற்றும் தரவுகளின் அடிப்படையிலான பயனாளிகள் தேர்வு முறை எல்லோராலும் பாராட்டப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், மாதம் ரூ.1000 வழங்குவதால் இடைநிற்றல் குறைந்து, மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை உயர்ந்துள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டம் 2.60 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது. அடுத்ததாக, 17 லட்சத்து 53 ஆயிரம் மாணவர்களுக்குப் பயன் அளிக்கும் ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’, மாணவர்களின் வருகையையும், ஊட்டச்சத்து நிலையையும், கற்றல் திறனையும் மேம்படுத்தியிருக்கிறது.
‘விடியல் பயணத் திட்டம்’ பெண்களின் பணிச்சூழல் பங்களிப்பை மேம்படுத்தி, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வித்திட்டுள்ளது. ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டமும், ‘இல்லம் தேடி கல்வி’ திட்டமும், தேசிய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.இப்படி பல்வேறு சமூகநலத் திட்டங்களை நிறைவேற்றி வரும் அதே வேளையில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியையும் வேகப்படுத்தி, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம்.
கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 40 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பல ஆண்டு காலமாக, தமிழகத்தில் சிறந்து விளங்கும் மோட்டார் வாகன உற்பத்தி, ஜவுளி உற்பத்தி, தோல்பொருட்கள் உற்பத்தி போன்ற துறைகள் மட்டுமல்லாமல், தோல் அல்லாத காலணி உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைப் பொருட்கள் உற்பத்தி, உலகளாவிய திறன் மையங்கள் ஆகியவற்றை புதிய வளர்ச்சித் துறைகளாக முன்னிறுத்தி, இந்தத் துறைகளிலும், இந்திய அளவில் அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளோம்.நலத்திட்டங்களையும் கட்டமைப்பு மேம்படுத்துதலையும் ஒரே நேரத்தில் செய்வதற்குத் தேவையான ஆதாரங்களை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்.
மாநில அரசுகளின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஓய்வூதியத் திட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றங்களையும் ஆய்வு செய்து வருகிறோம். தமிழகத்தின் முன்னேற்றத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்வதற்கான உங்களின் பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் நான் எதிர்நோக்கியுள்ளேன்,” என்று முதல்வர் பேசினார்.