கராச்சி,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானின் கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.
கராச்சியில் நேற்று அரங்கேறிய தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டாம் லாதம் 118 ரன்களும், வில் யங் 107 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் கடின இலக்கை நோக்கி களம் கண்ட பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வெற்றியோடு தொடங்கியது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக குஷ்தில் ஷா 69 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓ ரூர்கே, மிட்செல் சான்ட்னெர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். லாதம் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் அளித்த பேட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது குறித்து சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் வெற்றி பெற்ற விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக பவுலிங் செய்தார்கள். ஆனால் லதாம் மற்றும் யங் இருவரும் அமைத்த பார்ட்னர்ஷிப் மிகச்சிறந்த ஒன்றாக அமைந்துவிட்டது. சரியான நேரங்களில் அவர்கள் பவுண்டரி அடித்தனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய பிலிப்ஸ் அதிரடியாக விளையாடினார். நாங்கள் 260 ரன்களை சுற்றி இலக்கு நிர்ணயிப்போம் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் டெத் ஓவர்களில் நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிக ரன்கள் வந்தது. அவ்வளவு பெரிய இலக்கை நிர்ணயித்த பின், முதல் 10 ஓவர்கள் பவுலிங் எங்களின் கட்டுபாட்டுக்குள் இருந்தது.
ரிஸ்வானுக்கு எதிராக பிலிப்ஸ் பிடித்த கேட்ச் அற்புதமானது. ஏனென்றால் ரிஸ்வானின் விக்கெட் மிகவும் முக்கியம். முத்தரப்பு தொடரில் ஆடியது பாகிஸ்தான் அணியையும், இங்குள்ள் பிட்ச்சின் சூழலையும் நன்றாக புரிந்து கொள்ள உதவியது. வேகப்பந்து வீச்சாளர்கள் ஷார்ட் லெந்திலும், ஸ்பின்னர்கள் மெதுவாகவும் பவுலிங் செய்தால், இந்த பிட்சில் நன்றாக எடுபடும். பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி பவுலிங்கில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாலே வெற்றி பெற முடியும்” என்று கூறினார்.