ஜெயலலிதா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஏலம் விடுவது குறித்து விரைவில் உயர்மட்ட ஆலோசனை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை ஏலம் விடுவது தொடர்பாக, அரசு சார்பில் விரைவில் உயர்மட்ட ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991 – 96 காலகட்டத்தில் வருமானத்​துக்கு அதிகமாக சொத்​து கு​வித்​ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில், ஜெயலலிதா வீட்​டிலிருந்து தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட நகைகள், புடவை​கள், காலணி​கள், சொத்​து ஆவணங்கள் உள்ளிட்​ட​வை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு தமிழகத்​தில் இருந்து பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றத்​துக்கு மாற்​றப்​பட்​ட​தால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் கர்நாடக அரசின் கருவூலத்​துக்கு கொண்டு செல்லப்பட்டன. இவ்வழக்​கில் நீதிபதி குன்ஹா, கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை​யும், ரூ.100 கோடி அபராத​மும் விதித்​தார். இவ்வழக்​கில் பறிமுதல் செய்​யப்​பட்ட பொருட்களை அரசு ஏலம் விட்டு, வழக்கை நடத்திய கர்நாடக அரசுக்கு உரிய தொகையை வழங்க வேண்டும் எனவும் தீர்ப்​பளித்​திருந்தார்.

இத்தீர்ப்பை கடந்த 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அப்போது ஜெயலலிதா மறைந்துவிட்டதைத் தொடர்ந்து, அவருக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. இவ்வழக்கு நிறைவடைந்து பல ஆண்டு​கள் ஆகி​யும் கர்நாடக அரசுக்கு வழக்கை நடத்திய தொகை வழங்​கப்​பட​வில்லை.

இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, கடந்த 2023-ல் ஜெயலலி​தா​வின் நகைகளை ஏலம் விட வேண்​டும் என பெங்​களூரு குடிமை​யியல் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். இதில், கர்​நாடக மாநில கருவூலத்​தில் உள்ள, ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்​ துறையிடம் ஒப்படைக்கவும், வழக்கு நடத்திய கர்நாடக அரசுக்கு ரூ.5 கோடியை தமிழக அரசு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கர்நாடக கருவூலத்​தில் இருந்து நகைகள், சொத்து​ ஆவணங்கள் அடங்கிய 6 பெட்​டிகள் கடந்த வாரம் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன்படி, 1,562 ஏக்கர் மதிப்​பிலான நில ஆவணங்கள், 11 ஆயிரத்து 344 புடவை​கள், 750 காலணி​கள், 91 கைக்​கடி​காரங்கள் ஆகியவை ஒப்படைக்​கப்​பட்டன. மேலும், சொத்​துப் பட்டியலில் இருந்த 468 தங்க, வைர நகைகள் 27 கிலோ அளவில் ஒப்​படைக்​கப்​பட்டன.

இப்பொருட்கள் அனைத்தும் சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதை ஏலம் விடுவது தொடர்பாக ஆலோசிக்க உயர்மட்ட அளவிலான அதிகாரிகள் விரைவில் ஆலோசிக்க இருப்பதாக தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக அரசு உயரதிகாரிகள் கூறியதாவது: ஒரு முன்னாள் முதல்வரிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்தை எளிதில் ஏலம் விட்டுவிட முடியாது. ஏலம் விடுவது தொடர்பான வழிமுறைகளையும் கர்நாடக நீதிமன்றம் உத்தரவில் கூறியிருக்க வாய்ப்புள்ளது. அதை கருத்தில்கொண்டு, உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தப்பட்டு, அதன்பின் அமைச்சரவையில் விவாதித்து முடிவெடுத்து, அரசாணை வெளியிட்டு, வருவாய்த்துறை மூலமாகத்தான் ஏலம் விட முடியும்.

அதனால் உயர்மட்ட அளவிலான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அதில் எடுக்கப்படும் முடிவுகள் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம் விடும் நடவடிக்கையில் ஆளும் அரசு ஈடுபட்டால், அது மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும், திமுக அரசு மீது அதிமுகவினர் குற்றச்சாட்டு தெரிவித்து, அனுதாபம் தேடிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.