டெல்லி வளர்ச்சிக்காக ரேகா குப்தா முழுவீச்சில் பாடுபடுவார்: பிரதமர் மோடி நம்பிக்கை

புதுடெல்லி: டெல்லி முதல்வராக பதவியேற்ற ரேகா குப்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அவர் அடிமட்டத்திலிருந்து உயர்ந்து வந்துள்ளவர் என்றும், டெல்லியின் வளர்ச்சிக்காக முழுவீச்சில் பாடுபடுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவி ஏற்றுள்ளதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “டெல்லி முதல்வராகப் பதவியேற்ற ரேகா குப்தாவுக்கு வாழ்த்துக்கள். அவர் அடிமட்டத்திலிருந்து உயர்ந்து, கல்லூரி வளாக அரசியல், மாநில அளவிலான கட்சிப் பொறுப்பு, நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றில் தீவிரமாக செயல்பட்டு, இப்போது எம்.எல்.ஏ.வாகவும், முதல்வராகவும் உள்ளார். டெல்லியின் வளர்ச்சிக்காக அவர் முழு வீரியத்துடன் பாடுபடுவார் என்று நான் நம்புகிறேன். அவரது பதவிக்காலம் பலன் அளிக்க எனது வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

இதேபோல், டெல்லி அமைச்சர்களாக பதவியேற்றுள்ளவர்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “டெல்லி அரசில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ள பர்வேஷ் சாஹிப் சிங், ஆஷிஷ் சூத், மஞ்சிந்தர் சிங் சிர்சா, ரவீந்தர் இந்திரஜ் சிங், கபில் மிஸ்ரா, பங்கஜ் குமார் சிங் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். வீரியமும், அனுபவமும் அழகாகக் கலந்த இக்குழு, டெல்லிக்கு நல்லாட்சியை உறுதி செய்யும். அவர்களுக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “வஞ்சகம் மற்றும் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடும் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கு இலக்கணமாக விளங்கும் பாஜகவை டெல்லி மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசாங்கத்தில் முதல்வராக இன்று பதவியேற்றுள்ள ரேகா குப்தாவுக்கும் மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டெல்லியின் தாழ்த்தப்பட்டோர், பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளின் நலனுக்காக பிரதமர் மோடி உருவாக்கிய வளர்ந்த டெல்லி என்ற தொலைநோக்குப் பார்வை உங்கள் அனைவரின் திறமையான தலைமையின் கீழ் நிச்சயமாக நனவாகும். பாஜக அரசு டெல்லியை தூய்மையான, அழகான மற்றும் வளமான நகரமாக மாற்றுவதன் மூலம் உலகின் சிறந்த தலைநகராக மாற்றும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்

மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜெ.பி. நட்டா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “டெல்லி முதல்வராக பதவியேற்றுள்ள ரேகா குப்தா, அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பெரும்பான்மையை வழங்கியதன் மூலம், இரட்டை இன்ஜின் அரசாங்கத்திற்கு டெல்லி மக்கள் தங்கள் ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் வழங்கியுள்ளனர்.

பாஜக அரசு, பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் பொதுமக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப டெல்லியின் விரிவான வளர்ச்சியை மேற்கொள்வதன் மூலம் மக்கள் நலப் பணிகளை துரிதப்படுத்தும். உங்கள் தலைமையின் கீழ் டெல்லியை மேம்படுத்துவதே எங்கள் உறுதி” என குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி முதல்வராகப் பதவியேற்ற ரேகா குப்தாவுக்கு காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகனும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சந்தீப் தீட்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக தனது அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.